நெஞ்சே பதறிய சம்பவம்.. விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலர்.. காவல்துறை மீது பாய்ந்த ஆக்ஷன்
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம சபை கூட்டத்தின்போது விவசாயி எட்டி உதைத்து தாக்கப்பட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கங்காகுளம் என்ற கிராம ஊராட்சியிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கிராமசபை கூட்டத்தின் போது விவசாயி ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அப்போது அங்கிருந்த கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன், கேள்வி எழுப்பிய விவசாயி அம்மையப்பனை எட்டி உதைத்தார். கூட்டத்தில் இருந்த ராசு என்பவரும் விவசாயியின் கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட இருவர் மீதும் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின் பேரில், கங்காகுளம் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனை சஸ்பெண்ட் செய்து ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், விவசாயி எட்டி உதைக்கப்பட்ட விவகாரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் ஆய்வாளர் சங்கர கண்ணன் மற்றும் வன்னியம்பட்டி உதவி ஆய்வாளர் செல்லப்பாண்டி ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கங்காகுளத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்காதது மற்றும் விவசாயி தாக்கப்பட்ட சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications