சதுரகிரியில் பற்றிய காட்டுத்தீ.. விடிய விடிய அச்சத்துடன் விழித்திருந்த பக்தர்கள்.. மீட்ட வனத்துறை
விருதுநகர்: சதுரகிரி மலைப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீயினால் விடிய விடிய பக்தர்கள் அச்சத்துடனே கோவிலில் தங்கியிருந்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். மலை பெய்யாத காரணத்தால் நீரோடைகள் வறண்டு காணப்படுகின்றன. வறட்சி காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர். இன்றைய தினம் மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு அருகே சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் சாப்டூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் சிவலிங்கம் கழுத்து பகுதி சாய்ந்த நிலையில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

சித்தர்கள் வாழும் மலையான சதுரகிரி மலையில் ஏறி அங்குள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கத்தை தரிசனம் செய்து வருகின்றனர். பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மூலிகை வனமான சதுரகிரி மலை ஏறினால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக மாதந்தோறும் 8 நாட்களுக்கு பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த 15ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆடி அமாவாசை தினமான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். மலையில் சதுரகிரி மலையில் நாவலூத்து பகுதியில் பற்றிய காட்டுத் தீ பரவியது.
தீயானது மலையை சுற்றி பரவியதால் கோவிலில் இருந்து பக்தர்கள் இறங்க அனுமதிக்கப்படவில்லை. விடிய விடிய தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். தீ சுற்றி பரவியதால் விடிய விடிய அச்சத்துடனேயே மலை மீது பக்தர்கள் தங்கியிருந்தனர். காற்றின் வேகமும் அதிகமாக இருந்தததால் மலையை சுற்றிலும் தீ பரவியது.
ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலைக்கோயிலில் தங்கியிருந்தனர். 2வது நாளாக தீயானது எரிந்து வந்தது. ஆங்காங்கே தீ அணைக்கப்பட்டதால் மலைக்கோவிலில் தங்கியிருந்த பக்தர்களை கீழே இறங்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இன்று காலை முதலே பக்தர்கள் மலையில் இருந்து இறங்க ஆரம்பித்தனர். காட்டுத்தீ பரவியதால் விடிய விடிய அச்சத்துடன் மலைக்கோவிலில் தங்கியிருந்த பக்தர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே கோவிலுக்கு செல்வதற்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வந்தனர். தீ பற்றியதால் கோவிலில் இருந்து இறங்குவதற்கு மட்டுமே வனத்துறையினர் அனுமதி அளித்தனர். மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடனேயே திரும்பி சென்றனர்.
கடந்த ஆண்டு ஆடி அமாவாசையின் போது பெருமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது நீரோடைகளில் வெள்ள நீர் பாய்ந்தோடியதால் மலை ஏறிய பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்களை கயிறு கட்டி வனத்துறையினர் மீட்டனர். இதனையடுத்து மறுநாள் முதல் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு சதுரகிரி மலையில் தீ பற்றியதால் ஒரு நாள் மட்டும் பக்தர்களுக்கு மலை ஏறுவதற்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளதால் ஏமாற்றத்துடன் பலரும் திரும்பி சென்றனர்.












Click it and Unblock the Notifications