விருதுநகருக்கு விடியல்.. ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி இடையே புதிய ரயில்வே மேம்பாலம் திறப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள சாட்சியாபுரத்தில் அமைந்திருக்கும் ரெயில்வே கேட் ஒவ்வொரு முறையும் மூடப்படும்போது, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது. பணிகள் முடிந்த நிலையில் மேம்பாலத்திற்கு தியாகி சங்கரலிங்கனார் மேம்பாலம் என்று பெயர் சூட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி ரயில் நிலையங்களுக்கு இடையே 30 கிராம மக்கள் இதனால் பயன்பெறுவார்கள்
விருதுநகர் மாவட்டம் இரண்டு பிரதான ரயில் வழித்தடங்களை கொண்டுள்ளது. ஒன்று விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி செல்லும் சென்னை, கன்னியாகுமரி பிரதான ரயில் பாதையாகும். அடுத்தாக விருதுநகரில் இருந்து திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜாபாளையம் வழியாக தென்காசி நோக்கி சென்று செங்கோட்டை அப்படியே கேரளாவின் கொல்லம் செல்லும்.

இதில் சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள சாட்சியாபுரத்தில் அமைந்திருக்கும் ரயில்வே கேட் ரயில் வரும் போது எல்லாம் மூடப்படும். இந்த ரயில்வே கேட் ஒவ்வொரு முறையும் மூடப்படும்போது, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தார்கள் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களும், அவசரமாக மருத்துவமனை செல்லும் மக்களும் நீண்டநேரம் காத்திருக்கும் சூழ்நிலை இருந்தது.
அங்கு பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து விருதுநகர் மாவட்ட மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே நிலையங்களுக்கு இடையே சாட்சியாபுரத்தில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவிற்கிணங்க, ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி - விருதுநகர்-அருப்புக்கோட்டை-திருச்சுழி-நரிக்குடி-பார்த்திபனூர் சாலையில் ரெயில்வே பாலத்துக்கு மாற்றாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி ரெயில் நிலையங்களுக்கிடையே சாட்சியாபுரத்தில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த மேம்பாலத்தினால் சிவகாசியைச் சுற்றியுள்ள சாட்சியாபுரம், ஆனையூர், தேவர்குளம், திருத்தங்கல் உள்ளிட்ட 30 கிராமங்களைச் சேர்ந்த 5 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார் விடுதலைப் போராட்ட வீரரும், மதராஸ் மாநிலம் என்று அழைக்கப்பட்ட மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காக, தனது வீட்டின் முன்பு 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தவரும் ஆவார். அவரது தியாகத்தைப் போற்றும் வகையில், புதிதாகத் திறந்து வைத்த மேம்பாலத்திற்கு தியாகி சங்கரலிங்கனார் மேம்பாலம் என்று முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் செல்வதுரை, சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) சந்திரசேகர், தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சத்யபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications