அரசு அலுவலகங்களில் ரெய்டு.. அப்போதான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும்.. அமைச்சர் சொன்ன விளக்கம்!
அரசு அலுவலகங்களில் ரெய்டு நடந்தால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும் என்று கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
விருதுநகர்: தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்தால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதேபோல் மக்களை அரசு அதிகாரிகள் அலைக்கழிப்பது சோதனைகள் மூலம் மட்டுமே குறையும் என்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதாக கடந்த சில நாட்களாக புகார்கள் எழுந்தன. அதிகாரிகளிடம் இருந்தும், மக்களிடம் இருந்தும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் சென்றுள்ளன.
இந்த புகார்களை பட்டியல் எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்த முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் உள்ள 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளனர்.

60 இடங்களில் ரெய்டு
நேற்று பிற்பகல் தொடங்கிய லஞ்ச் ஒழிப்புத்துறையினரின் சோதனை, பல்வேறு இடங்களில் இரவு வரை தீவிரமாக நடைபெற்றுள்ளது. தேனி, நெல்லை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து அதிக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த புகார்கள் தொடர்பாகவும் ரெய்டுகள் நடத்தப்பட்டு இருக்கின்றன.

ரூ.34 லட்சம் பறிமுதல்
அதேபோல் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் திட்டமிட்டு ரெய்டு நடத்தியுள்ளனர். ரெய்டு நேரத்தில் ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் அதிகாரிகளின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சோதனையின் முடிவில் கணக்கில் வராத 34 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ஆவணங்கள் பறிமுதல்
திருவண்ணாமலையில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த சோதனையிலும் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இங்கே ஊழல் தடுப்பு ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையில் நேரடி சோதனை நடந்தது. இங்கே பல கணக்கில் வராத ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

அமைச்சர் விளக்கம்
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை குறித்து வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்தால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும். மக்களை அரசு அதிகாரிகள் அலைக்கழிப்பது சோதனைகள் மூலம் மட்டுமே குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications