கண்ணை கவர்ந்த வாழைத்தார்.. ஸ்டாலின் நிகழ்ச்சியில் விருதுநகர் மக்கள் செய்ததை பாருங்க! ரொம்ப ஓவர்ங்க
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று முடித்தார். பட்டம்புதூரில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஸ்டாலினை வரவேற்பதற்காக வைத்திருந்த வாழை மரங்களில் இருந்த வாழைத்தார்களை நிகழ்ச்சி முடிந்த பிறகு போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் தூக்கி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக சென்று நிர்வாக பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில் 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் ஸ்டாலின் நேற்று விருதுநகர் மாவட்டத்துக்கு சென்றார்.

சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு விமானத்தில் வந்த முதல்வர் ஸ்டாலின் அதன்பிறகு காரில் விருதுநகர் சென்றார். சத்திரரெட்டியபட்டி விலக்கில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பிறகு சிவகாசி அருகே கன்னிச்சேரிபுதூருக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் பட்டாசு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். சூலக்கரை மேடு பகுதியில் உள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு காப்பகம் மற்றும் பள்ளிக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள மாணவிகளிடம் கலந்துரையாடினார். இனிப்புகள் வழங்கினார். மாணவிகள், ஸ்டாலினை அப்பா என்று அழைத்தனர். அதன்பிறகு பிறகு மாலை 5.30 மணிக்கு விருதுநகரில் வாகன பேரணி நடந்தது. பிறகு இரவில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து 2வது நாளான இன்று காலையில் ரூ.77 கோடி செலவில் 6 தளங்களாக கட்டப்பட்டுள்ள புதிய விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.அதன்பிறகு பட்டம்புதூரில் பயனாளிகளுக்கு பட்டா வழங்குதல் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். ரூ.417 கோடி மதிப்பில் 57,556 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ஸ்டாலினிடம் நலத்திட்ட உதவிகளை பெற்றனர். முதல்வர் ஸ்டாலினை வரவேற்க பல நூறு வாழைமரங்கள் இருபுறங்களிலும் கட்டிவைக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகு ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். இதையடுத்து பொதுமக்களின் பார்வை வாழைத்தார்களை நோக்கி சென்றது.
பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாழைத்தார்களை வெட்டி தோள், தலையில் வைத்து சுமந்து சென்றனர். சிலர் வாழைத்தார்களில் இருந்த வாழைக்காய்களை ஒவ்வொன்றாக எடுத்து பாலித்தீன் கவரில் போட்டு தூக்கி சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications