நான் பாஜகவில் இணைந்தது ஏன்? விருதுநகரில் எனது போட்டியாளர் யார்? ராதிகா சரத்குமார் பரபரப்பு பதில்
விருதுநகர்: நான் பாஜகவில் இணைந்தது ஏன் என்பது குறித்து நடிகையும் விருதுநகர் லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளருமான ராதிகா சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் பதில் அளித்திருந்தார்.

அதில் முக்கிய கேள்வி- நீங்கள் பாஜகவில் இணைந்தது ஏன்? இதற்கு ராதிகா சரத்குமார் அளித்த பதில்- "ஏன் பாஜகவில் சேரக் கூடாதா, பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உங்களுக்கு தெரியவில்லையா?
உங்கள் தொகுதியில் உங்களுக்கு போட்டியான வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அவர் கூறியிருப்பதாவது: விஜய பிரபாகரனோ அல்லது மாணிக்கம் தாகூரோ, நான் போட்டியாளர்களை பற்றி சிந்திக்கவில்லை, நாங்கள் எங்களின் சாதனைகளை மக்களிடையே பரப்பி வாக்குகளை கேட்டு வருகிறோம் என்றார்.
முதல் முறையாக வேட்பாளராக இறங்கும் உங்களுக்கு அனுபவம் எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு ராதிகா சொன்னது என்ன தெரியுமா? எல்லா இடங்களிலும் மக்கள் தங்களின் அன்பை உணர்த்துகிறார்கள். பெண்கள் தங்களின் பிரச்சினைகளை பேசுகிறார்கள்.
வெற்றி பெறுவோம் என முழு நம்பிக்கை உள்ளது என்றார். மேலும் கடைசி கேள்வியாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டால் ராதிகா தொடர்ந்து செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு அதையெல்லாம் முடிவு செய்ய இன்னும் நேரம் இருக்கிறது. இப்போது தேர்தல் வெற்றியே ஒரே இலக்கு என ராதிகா தெரிவித்திருந்தார்.
நடிகை ராதிகா, சிவகாசி சட்டசபை தொகுதிக்குள்பட்ட திருத்தங்கல் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் இந்த தொகுதியில் சிறப்பான பல திட்டங்களை என்னால் கொண்டு வர முடியும். விருதுநகருக்கும் டெல்லிக்கும் நான் பாலமாக இருப்பேன். இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கூட அடுத்த பிரதமர் மோடி ஜி தான் என கூறுகிறார்கள்.
400 க்கும் மேற்பட்ட எம்பி தொகுதிகளை பாஜக நிச்சயம் கைப்பற்றும். இந்த தொகுதியில் வெற்றி பெற்று நான் எம்பியாக நாடாளுமன்றம் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். சிவகாசியில் தீப்பெட்டிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. எனக்கு அரசியல் ஆர்வம் இருந்தாலும் நான் இத்தனை காலமாக எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை.
முதல்முறையாக விருதுநகரில் போட்டியிடுகிறேன். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள், பாஜக கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருக்கிறார். திமுக, அதிமுக கூட்டணியில் யாரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்கள். யாருக்காக இவர்கள் இருவரும் ஓட்டு கேட்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணி வெற்றி பெற்று டெல்லிக்கு சென்று தமிழக பிரச்சினைகளை தீர்ப்பேன் என்கிறார். அவர் யாரை சந்திப்பார், யாரிடம் முறையிடுவார்.
தமிழகத்தில் அவர் காமெடி பீஸ் ஆகிவிட்டார். இனி என்ன செய்ய போகிறார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி சிகரெட் லைட்டர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதால் சிவகாசியில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்தார். விருதுநகர் தொகுதியில் தினமும் ராதிகா, தனது கணவர் சரத்குமாருடனும் நிர்வாகிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications