விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு காய் நகர்த்தும் ராஜ் சத்யன்! மதுரையிலிருந்து ஷிஃப்ட்! என்ன பின்னணி?
விருதுநகர்: 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருவதை போல், எந்த தொகுதியில் நின்றால் வெற்றிவாய்ப்பு பிரகாசம் என்பது பற்றி வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளவர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் அதிமுக ஐடி விங் நிர்வாகியும், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வின் மகனுமான ராஜ் சத்யன், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு அதற்கான களப்பணிகளை தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார் ராஜ் சத்யன். மதுரை அதிமுகவில் நிலவும் உட்கட்சி கோஷ்டி பூசல்களால் மீண்டும் தனது வெற்றிவாய்ப்பு பறிபோய்விடக் கூடாது என்பதில் மிக உறுதியாக உள்ள ராஜ் சத்யன் , இதனால் தான் விருதுநகர் பக்கம் கவனம் செலுத்துவதாக கூறுகிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.
இன்னும் சொல்லப்போனால் விருதுநகர் தொகுதியில் களப்பணியை கூட அவர் தொடங்கிவிட்டதாக தெரிவிக்கிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் மாணிக்கம் தாகூர் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இதனால் அவரை எதிர்த்து போட்டியிடுவதில் தங்களுக்கு பெரிதாக எந்த சிக்கலும் இருக்காது எனக் கருதுகிறது ராஜ் சத்யன் தரப்பு.

இதனிடையே வரும் தேர்தலிலும் மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சு.வெங்கடேசன் தான் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக எந்தக் கெட்டபெயரும் இல்லை. இதனால் மீண்டும் அவரை எதிர்த்து போட்டியிட்டு ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கும் பொருட்டு விருதுநகர் தொகுதி பக்கம் ராஜ் சத்யன் கண் வைத்திருப்பதாக தெரிகிறது.
அதுமட்டுமல்ல அவரது தந்தை ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் விருதுநகரில் ஓடி ஆடி வேலை செய்வதில் எந்த சிரமமும் இருக்காது எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications