ஏத்திருவியோ.. மண் அள்ளிய டிராக்டரை மறித்த அதிமுக முன்னாள் அமைச்சர்.. ஏற்ற முயன்றதால் பரபரப்பு!
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மண் அள்ளி வந்த டிராக்டரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மீது டிராக்டரை ஏற்ற முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அரசு அனுமதி பெறாமல் சிலர் சட்ட விரோதமாக மணல் அள்ளி வருகின்றனர். அங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் இன்று காலை 5-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பல டிராக்டர்களில் மண் அள்ளப்பட்டு வந்தது.

பெரியகுளம் கண்மாயில் அனுமதியின்றி மண் அள்ளுவதாகவும், மண் அள்ளிக்கொண்டு வாகனங்கள் வேகமாகச் செல்வதால் சாலையில் செல்லும் பொதுமக்களிடையே அச்சம் நிலவுவதாகவும் தகவல் கிடைத்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தலைமையில் அதிமுகவினர் அங்கு சென்றனர்.
பெரியகுளம் கண்மாயில் மண் அள்ளுவதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் எதிர்ப்பு தெரிவித்தார். அதனை மீறி மண் அள்ளிக்கொண்டே இருந்ததால், இதனால் மண் அள்ளுபவர்களுக்கும், இன்பத்தமிழன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்படித்தான் மண் அள்ளுவோம், உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள் என அவர்கள் தெரிவிக்கவே, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மண் அள்ளிக் கொண்டு சென்ற டிராக்டரை மறித்தபோது, இன்பத்தமிழன் மீது டிராக்டரை ஏற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட அதிமுகவினர் மணல் கொள்ளைக்கு எதிராக ஆவேசமாகப் பேசி, நீதிமன்றத்தை நாடவிருப்பதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றனர். அதன்பிறகும் டிராக்டர்களில் மணல் அள்ளுவது தொடர்ந்தது அப்பகுதியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications