விருதுநகர் பாலியல் கொடுமையை கண்டித்து அண்ணாமலை தலைமையில் பாஜக ஆர்ப்பாட்டம்.. சசிகலா புஷ்பா பங்கேற்பு
விருதுநகர்: பட்டியலின இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாகக்கூறி மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
விருதுநகரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 22 வயது பட்டியலின இளம்பெண்ணை திமுக இளைஞரணி நிர்வாகிகள் இருவர், பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் திமுக இளைஞரணியை சேர்ந்த ஹரிஹரன் காதலிப்பதுபோல் நடித்து தனிமையில் இருந்தபோது அதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி, தனது நண்பர்கள் உட்பட மொத்தம் 8 பேருடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்தார்.

8 பேர் அதிரடி கைது
தனக்கு உதவுவதாக கூறிய மாடசாமி என்பவரும் வீடியோவை பெற்றுக்கொண்டு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாக அந்த பெண் காவல்நிலையத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் திமுக நிர்வாகி ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுகவிலிருந்து நீக்கம்
இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஜூனைத் அகமதை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விருதுநகர் இளம்பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்க்கையை சீரழித்ததற்கு திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் எனவும் உறுதி அளித்தார்.

அண்ணாமலை கண்டனம்
இதுகுறித்து ட்விட்டரில் கடந்த 22 ஆம் தேதி கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "தமிழகத்தில் சிறுமிகள், பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை தினமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது விருதுநகரிலே 24ஆம் தேதி காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாஜக, மாநில அரசு அரசியல் காரணங்களுக்காக நம் காவல்துறையை செயல்பட விடாமல் இருப்பதை கண்டித்து போராட்டம் நடத்த இருக்கிறது! 22 வயது நம் சகோதரியின் மீது விருதுநகரிலே நடத்தப்பட்ட கூட்டு பலாத்காரம் நம்முடைய நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது! தமிழக அரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தமிழகத்தில் நடந்த கடைசி பாலியல் வன்கொடுமை ஆக இது இருக்கும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

விருதுநகரில் பாஜக ஆர்ப்பாட்டம்
இதனிடையே அண்ணாமலை அறிவித்தபடி, விருதுநகரில் இன்று அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும், பாரத் மாதா கி ஜே என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
Recommended Video

முன்வரிசையில் சசிகலா புஷ்பா, மதுவந்தி
இதில் பேசிய அண்ணாமலை தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அடுத்தடுத்து பாலியல் குற்றங்கள் நடந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். அண்ணாமலையுடன் முன்வரிசையில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சசிகலா புஷ்பா, நடிகையும் பாஜக நிர்வாகியுமான மதுவந்தி உள்ளிட்டோர் முன்வரிசையில் நின்று தமிழ்நாடு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications