விஜய பிரபாகரனுக்காக களமிறங்கிய சண்முகபாண்டியன்.. "அப்பா" என சொல்லும் போதே கலங்கிய மகன்
விருதுநகர்: விருதுநகரில் அண்ணன் விஜயபிரபாகரனுக்காக தம்பி சண்முகபாண்டியன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.

திருவள்ளூரில் நல்லதம்பியும் மத்திய சென்னையில் பார்த்தசாரதியும் விருதுநகரில் விஜய பிரபாகரன், தஞ்சையில் சிவநேசன், கடலூர் சிவக்கொழுந்து ஆகியோர் போட்டியிடுகிறார்கள். விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் ஆதரித்து வாக்குச் சேகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அண்ணனுக்காக முதல் முறையாக அவருடைய தம்பி சண்முகபாண்டியன் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் சண்முகபாண்டியன் கூறுகையில் நான் முதல் முறையாக அண்ணனுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்துள்ளேன்.
நான் அப்பாவுடைய கோயிலில் இருந்த போது என்னிடம் மக்கள் வந்து சொன்ன விஷயம் என்னவென்றால், "ஒரு வாட்டியாவது அப்பாவை ஜெயிக்க வைத்திருக்கணும், நாங்கள் தப்பு செய்துவிட்டோம்" என வருந்தினார்கள்.
என் அப்பா சாயலில் இருக்கும் என் அண்ணனை நீங்கள் ஜெயிக்க வைத்தால் என் அப்பா ஆத்மா சாந்தியடையும். நீங்கள் நினைத்தது நடக்கும். உங்களுக்கு இருக்கும் கோரிக்கைகளை என் அண்ணன் கேட்டு தீர்த்து வைப்பார். முரசு சின்னத்திற்கு வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டு வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
விஜயகாந்த் குறித்து சண்முகபாண்டியன் பேச பேச அங்கிருந்த பெண்கள் கண்ணீர் சிந்தினர். விஜய பிரபாகரன் அவருடைய தம்பி சண்முகபாண்டியனின் பிறந்தநாளுக்கு போர்ஷ் ரக காரை பரிசாக கொடுத்தார். இந்த காரின் விலை எப்படியும் ரூ 1.5 கோடி இருக்கும் என தெரிகிறது.
விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும், காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும் போட்டியிடுகிறார்கள். கடந்த முறை நடந்த தேர்தலில் 4,70,883 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் வெற்றி பெற்றார். அவரை அடுத்து 3,16,329 வாக்குகள் பெற்று தேமுதிக வேட்பார் அழகர்சாமி 2-ம் இடத்தைப் பெற்றார்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் விஜயகாந்த் பிறந்த ஊர் உள்ளது என்பதால்தான் விஜய பிரபாகரன் களமிறக்கப்பட்டார். இங்கு எப்படியும் அப்பாவின் ஆசியுடன் வெல்வேன் என விஜய பிரபாகரன் கடுமையாக போராடி வருகிறார். மக்கள் யாரை ஆதரிப்பார்கள் என்பது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளின்போதுதான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications