வாய்க்கால் வரப்பில் அன்று அண்ணாந்து பார்த்த விமானம்.. இன்று உலகையே சுற்றுகிறேன்.. டி.ஆர்.பாலு
விருதுநகர்: தஞ்சை மாவட்டத்தில் சிற்றூரில் வாய்க்கால் வரப்பில் உட்கார்ந்திருக்கும் போது மேலே பறக்கும் விமானத்தில் ஒரு முறையாவது பயணம் செய்ய மாட்டோமா என ஏங்கியுள்ளேன் என திமுக எம்பி டி.ஆர்.பாலு தனது வளர்ச்சி குறித்து உருக்கமாக தெரிவித்திருந்தார்.
விருதுநகரில் பட்டம்பூர் அண்ணா நகரில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முதலில் நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்பட்டது. அதில் டி.ஆர் பாலுவுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் லட்சக்கணக்கானோ கலந்து கொண்டனர். பெரியார் விருது சம்பூர்ணம் சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் சம்பூர்ணம் சுவாமிநாதனுக்கு டிஆர். பாலு பாராட்டுரை வழங்கினார். அவர் கூறுகையில், கருணாநிதி அவர்கள் எனக்காக பல்வேறு பெருமைகளை அளித்திருக்கிறார்கள் வாழ்நாளில் எனக்கு அளிக்காத பெருமைகள் ஒன்றில்லை, இரண்டில்லை. எல்லா பெருமைகளையும் அளித்தார்கள்.

உந்து சக்தி
அதற்கு பின்புலமாகவும் உந்து சக்தியாகவும் திகழ்ந்தவர் முதல்வர் ஸ்டாலின்தான். அவரது பின்புலமும் உந்துசக்தியும் இல்லாவிட்டால் இந்த அளவுக்கு நான் உயர்ந்திருக்க வாய்ப்பே இல்லை. எங்கேயோ தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் வாய்க்கால் வரப்பில் உட்கார்ந்து கொண்டு ஓடும் தன்ணீரில் இரு கால்களையும் இணைத்து கொண்டு உயர உயர பறந்து இரைச்சலுடன் செல்லும் விமானத்தை பார்த்து ஆச்சரியப்படுவேன்.

பறக்கமுடியுமா
இந்த விமானத்தில் ஒரு முறையாவது பறக்க முடியுமா என எண்ணியிருக்கிறேன். ஆனால் அதே விமானத்தில் நூற்றுக்கணக்கான முறை பயணம் செய்து இந்த உலகையே சுற்றி வர ஸ்டாலினின் பின்புலமும் உந்து சக்தியும்தான் காரணமாக அமைந்தது. எனக்கு அளித்த பொறுப்புகளும் கடமைகளும் ஒன்றல்ல, இரண்டல்ல.

மாவட்ட பிரதி
1975 ஆம் ஆண்டு சென்னை மாவட்ட பிரதியாக மாவட்ட துணைச் செயலாளராக 1982 இல் மாவட்ட செயலாளராக இரு முறையும் 1996, 1999, 2003 இல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். 1996 ஆம் ஆண்டு பெட்ரோலியத் துறை அமைச்சராக 2003 இல் சுற்றுச்சூழல் அமைச்சராக 2004 இல் கப்பல் போக்குவரத்து அமைச்சராக என இத்தனை பொறுப்புகளையும் பதவிகளையும் வழங்கிய நேரத்தில் ஸ்டாலின்தான் உந்துசக்தியாக இருந்தார் என சொல்லிக் கொள்வதில் நான் பெருமையடைகிறேன்.

நன்றிகள் பல!
அப்படிப்பட்ட பெருமைகளை எனக்கு தந்த என்னுடைய இயக்கம், எனது தோழர்கள், கோடிக்கணக்கான தொண்டர்கள், இங்கே உட்கார்ந்திருப்போர், பொதுக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், மேடையில் அமர்ந்திருக்கும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆகியோருக்கு எனது நன்றிகள். இன்று நாங்கள் எடுத்துக் கொள்ளும் ஒரே உறுதிமொழி- இறுதி வரை உங்களுக்காக, திமுகவின் கடைசி தொண்டனுக்காக இந்த தலைமைக்காக நன்றியோடு இருப்பேன் என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications