விருதுநகர் பிரம்மாண்டம்.. 80 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
விருதுநகர் : விருதுநகரில் நாட்டிலேயே முதன் முறையாக சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ராம்கோ நிறுவனம் சிமெண்ட் தயாரிக்க தேவையான மூலப்பொருள்களில் ஒன்றான சுண்ணாம்புக்கல்லை பந்தல்குடி அருகே 80 ஏக்கர் பரப்பளவில் எடுக்கத்தொடங்கி தற்போது 60 மீட்டர் ஆழம் வரை எடுத்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுப்புற சூழலை கருத்தில் கொண்டு அச்சுரங்கத்தை அப்படியே கைவிடாமல் புதிய முயற்சியாக ரூ.5.2 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்துள்ளனர்.

சுற்றுச்சூழல் பூங்கா
அதன் படி தாவரங்கள், விலங்குகளின் பல்லூயிர் ஆதாரங்களை உருவாக்கும் வகையில் நீர்நிலை பாதை, வறண்ட நிலத்தில் வளரும் தாவரங்கள், தோட்டம், பந்தல் பூங்கா, புல்வெளி, அழியும் நிலையிலுள்ள தாவரங்கள் மற்றும் 200 வகையான மரங்கள், மூலிகை தாவரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சிறப்பான குறுங்காடு
இங்கு ஆயிரக்கணக்கான பறவைகள், வண்ணத்து பூச்சிகள், நுண்ணுயிரிகள் வசிக்க துவங்கியுள்ளதால் இப்பூங்கா குறுங்காடு போல் காட்சியளிக்கிறது. பூங்கா திறப்பு விழா பந்தல்குடியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தலைமை வகித்தார்.

ஏராளமானோர் பங்கேற்பு
வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் ராம்கோ குழும தலைவர் வெங்கட்ராம ராஜா, அவரது மனைவி நிர்மலா மற்றும் ராம்கோ நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பான வரவேற்பு
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மாலை 5 மணி அளவில் மதுரை வந்தார். மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக காரில் மாலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடிக்கு வருகைதந்த அவருக்கு மதுரை-தூத்துக்குடி சாலையில் விருதுநகர் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications