மனநலன் பாதிக்கப்பட்ட மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்ய வைத்த கொடூரம்! பள்ளி ஆசிரியர் கைது
விருதுநகர்: விருதுநகரில் அரசு உதவி பெறும் பள்ளியில் மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை கொண்டு கழிவறை சுத்தம் செய்ய வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் மனநலன் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசு உதவிபெறும் சி.எஸ்.ஐ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 80க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளி மாணவர்கள் சிலர் துடைப்பம் கொண்டு பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. மட்டுமல்லாது செய்தி ஊடகங்களிலும் இந்த வீடியோ வெளியாகி விவாதங்களை கிளப்பியது.

இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிகள் பள்ளியில் ஆய்வை மேற்கொண்டனர். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்தபோது பள்ளிக்கும் தலைமை ஆசிரியருக்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இமானுவேல் எனும் இடைநிலை ஆசிரியர் மாணவர்களை வைத்து கழிவறை சுத்தம் செய்ய வைத்து அதை வீடியோவாக பதிவு செய்துள்ளது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து காவல்துறையில் ஆசிரியர் இமானுவேல் மீது பள்ளி நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆசிரியர் இமானுவேலை கைது செய்துள்ளனர். பள்ளிக்கும், தலைமை ஆசிரியருக்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மனநலன் பாதிக்கப்பட்ட மாணவர்களை கொண்டு கழிவறையை சுத்தம் செய்ய வைத்து அதை வீடியோவாக எடுத்து ஆசிரியர் ஒருவரே சோஷியல் மீடியாவில் பரப்பியுள்ள சம்பவம் பெரும் விருதுநகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications