தங்கத்துக்கு "ஜெர்க்" தந்தாரே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்? இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேஸ் விசாரணை
விருதுநகர்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தற்போதைய தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.. இதையடுத்து, கடந்த வருடம் அமைச்சரை வழக்கில் இருந்து சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. எனினும், சென்னை ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் முதலில் இருந்து வழக்கினை தினமும் விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2006 - 2011 திமுக ஆட்சி காலத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பு வகித்தார்.. அப்போது, வருமானத்திற்கு அதிகமாக ரூ. 76 லட்சம் சொத்து சேர்த்ததாக தங்கம் தென்னரசு, அவரது மனைவி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2012ல் சொத்துக் குவிப்பு வழக்கை பதிவு செய்தது.

அப்பீல் மனு தாக்கல்
இந்த வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என தங்கம் தென்னரசு மனுதாக்கல் தொடர்ந்தார்.
அந்த மனுவில், "அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அதிமுக ஆட்சியில் தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம், தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022ம் ஆண்டு உத்தரவிட்டது.
ஆனந்த் வெங்கடேஷ்
இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை அப்பீலுக்கு போகவில்லை, ஆனால், தங்கம் தென்னரசுவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்த விடுவித்த உத்தரவை ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தாமாக முன்வந்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மறுஆய்வுக்கு எடுத்தார். ஆனந்த வெங்கடேசன் இவ்வாறு செய்தது, திமுக தரப்பில் மிகுந்த அதிர்ச்சியை உண்டுபண்ணியிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தங்கம் தென்னரசு தரப்பில், "தமிழகத்தில் ஆட்சிக்கு மாற்றத்திற்கு பிறகு பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்கு பதிவு செய்யப்பட்டது.. இதுகுறித்து நியாயமாக விசாரணை நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், ஆதாரங்களை புறக்கணித்து விட்டு வழக்கு தொடர்வதை எப்படி நியாயமான விசாரணை என்று கருத முடியும்?" என்றெல்லாம் தன்னுடைய வாதங்களை முன்வைத்தார்.
இன்று விசாரணை
இதையடுத்து, இந்த உத்தரவினை எதிர்த்து அமைச்சர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடை வழங்கப்பட்டது. ஆனாலும் ஸ்ரீவில்லிபுத்துார் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு பட்டியலிடப்பட்டு வாய்தா போடப்பட்டு வருகிறது.
இதன்படி இந்த வழக்கின் வாய்தா இருந்த நிலையில், உச்சநீதிமன்ற தடை உத்தரவு தொடர்வதால் வழக்கின் விசாரணையை, ஜூலை 11க்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் கடந்த மாதம் ஒத்திவைத்திருந்தார்.
அதன்படி இன்றைய தினம், இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.. இது திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications