அசரலையே திமுக.. முதல்ல டாக்டர்.. அப்பறம் ஷ்யாம்.. அறிவாலயத்தில் புதிய தமிழகம் வீசிய புதிய அஸ்திரம்
விருதுநகர்: திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்ததுடன், சில முக்கிய கேள்விகளையும் ஆட்சிக்கு எதிராக எழுப்பியிருக்கிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
புதிய தமிழகம் கட்சியின் அரசியல் நகர்வு, ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகிறது.. கடந்த நவம்பர் 15-ல், புதிய தமிழகம் கட்சியின் 25 வருட ஆண்டு விழா மாநாடு, ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரம்மாண்டமாக நடந்தது..

செல்வாக்குமிக்க ஓட்டப்பிடாரம் தொகுதியில்தான், தேவேந்திர குல வேளாளர் சமூகவாக்குகளும் மிக அதிகம்... ஆனாலும், ஓட்டப்பிடாரத்தில் போதுமான வெற்றியை சுவைக்க முடியாததால், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியை குறிவைக்கவே, இப்படி ஒரு மாநாட்டை டாக்டர் கிருஷ்ணசாமி முன்னெடுப்பதாக சலசலக்கப்பட்டது.
என்ன காரணம்: புதிதாக அலுவலகத்தை திறந்துவைத்துள்ளதால், ஒருவேளை, வரப்போகும் தேர்தலில், தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் போட்டியிடுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.. அதுமட்டுமல்ல, டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன், இதே தென்காசி தொகுதியில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருவதால், இந்த சந்தேகம் மேலும் அதிகமானது.. அல்லது இந்த தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுவாரா? அல்லது அவரது மகன் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியது.
இப்படிப்படிப்பட்ட சூழலில்தான், இந்த வருடம் கட்சியின் 26ம் ஆண்டு தொடக்க விழாவை வரும் டிசம்பர் 15ல் நடத்த புதிய தமிழகம் கட்சி தயாராகி வருகிறது. இதுகுறித்து, ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார்..
ராஜபாளையம்: "பரிபூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். டிசம்பர் 15ல் கட்சியின் 26ம் ஆண்டு தொடக்க விழாவை பூரண மதுவிலக்கு, டாஸ்மாக் ஒழிப்பு மாநாடாக நடத்தவுள்ளோம். மே 10ல் தமிழகத்தில் 19 மதுபான உற்பத்தி ஆலைகள் மூலம் அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1லட்சம் கோடி ஊழல் நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதை நிரூபிக்கக் கூடிய வகையில் கடந்த வாரம் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவனங்களை அமலாக்கத்துறை ஆய்வு செய்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தபோது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னார். ஆனால் ஜெகத்ரட்சகன் நிறுவனங்களில் நடந்த ஆய்வு குறித்து, முதல்வர் விளக்கம் அளிக்காததற்கு என்ன காரணம்? தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை. டாஸ்மாக்கை ஏன் ஒழிக்க மறுக்கின்றனர் என்று இப்போது தெரிகிறதா?
திமுக ஆட்சி: வேலியே பயிரை மேய்வதற்கு இணங்க ஆட்சியில் அமர்ந்துக்கொண்டு அதன் பாதுகாப்பில் சில மக்கள் பிரதிநிதிகள் மணல், கனிம வளங்களை கொள்ளை அடிக்கின்றனர். இந்த ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.
ஆக, தொடர்ந்து திமுக எதிர்ப்பில் உறுதியாக உள்ளது புதிய தமிழகம் கட்சி.. எனினும், அதிமுக, பாஜக கூட்டணி முறிவால், எந்த முடிவு எடுக்க போகிறதென்று தெரியவில்லை.. கூட்டணி முறிவையடுத்து, பாரிவேந்தர், வாசன், ஜான்பாண்டியன், போன்றோருடன் கிருஷ்ணசாமியும் பாஜக தரப்பை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருப்பதாக செய்திகள் கசிந்தன.
யாருடன் கூட்டணி: எனினும், எடப்பாடி பழனிசாமியின் "கறார்" முடிவு பாஜகவையே அதிர வைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், புதிய தமிழகம் கட்சியின் அரசியல் நகர்வு பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி உள்ளது... விரைவில் நடத்தப்படும் ஆண்டுவிழாவில், தேர்தல் குறித்த நிலைப்பாட்டினை அக்கட்சி அறிவிக்கலாம் என்றும் தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications