10 ஆண்டுகளாக குழந்தைக்காக தவமிருந்த பெண்.. கடைசியில் நேர்ந்த பரிதாபம்.. ஐயோ.. இப்படியா ஆகணும்?
பெயர் சொல்ல ஒரு குழந்தை கூட இல்லையே என்ற கவலையிலும், ஏக்கத்திலும் 10 ஆண்டுகள் இருந்த முத்துமாரி, கடந்த ஆண்டு கர்ப்பமானார்.
விருதுநகர்: 10 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் கடைசியில் பிரசவ நேரத்தில் உயிரிழந்த சோக சம்பவம் விருதுநகரில் அரங்கேறியுள்ளது.
அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்த அடுத்த சில நிமிடங்களிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு அப்பெண் இறந்திருக்கிறார். சிறிது நேரத்தில் அந்தக் குழந்தையும் உயிரிழந்திருக்கிறது.
அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தாலேயே தாயும் குழந்தையும் பலியாகி இருப்பதாகக் கூறி, உறவினர்களும் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருவாரத்தில் இறந்த குழந்தை
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி முத்துமாரி. இந்த தம்பதியருக்கு 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு உடனடியாக கர்ப்பம் தரித்த முத்துமாரி, ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார் ஆனால், அந்தக் குழந்தை, பிறந்து ஒரு வாரத்திலேயே இறந்தது. இதனால் பன்னீர்செல்வம் - முத்துமாரி தம்பதியர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

10 ஆண்டுகளுக்குப் பின் கர்ப்பம்
கையில் கிடைத்த குழந்தை இறந்துபோனதால் மிகவும் சோகத்தில் இருந்த முத்துமாரி, அதன் பிறகு கர்ப்பம் தரிக்கவில்லை. பெயர் சொல்ல ஒரு குழந்தை கூட இல்லையே என்ற கவலையிலும், ஏக்கத்திலும் முத்துமாரி இருந்திருக்கிறார். மேலும், இறந்துபோன முதல் குழந்தையின் நினைவாகவே அவர் இருந்து வந்திருக்கிறார். இந்நிலையில்தான், கடந்த ஆண்டு முத்துமாரி கர்ப்பம் ஆகியிருக்கிறார். 10 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த முத்துமாரி, மீண்டும் கர்ப்பம் ஆனதால் மகிழ்ச்சியில் துள்ளி குதித்திருக்கிறார். அவரது குடும்பத்தினரும் சந்தோஷத்தில் திளைத்துள்ளனர்.

திடீர் மூச்சுத்திணறல்
இந்த சூழலில், கடந்த புதன்கிழமை முத்துமாரிக்கு பிரசவ வலி ஏற்படவே, விருதுநகர் அரசு மருத்துவமனையில் அவரை உறவினர்கள் சேர்த்தனர். இதில் நேற்று அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 10 வருடங்களாகத் தனது குழந்தையின் முகத்தைப் பார்க்கத் தவமாய் தவமிருந்த முத்துமாரி, தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்த்துப் பரவசப்பட்டுள்ளார். ஆனால், சில மணிநேரங்களிலேயே முத்துமாரிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் முத்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

கொந்தளித்த உறவினர்கள்
இதனிடையே, தாய் உயிரிழந்த அடுத்த ஒரு மணிநேரத்தில் அந்தப் பெண் குழந்தையும் மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தாயும், சேயும் அடுத்தடுத்து உயிரிழந்ததை அறிந்த உறவினர்கள் கொந்தளித்து போயினர். மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் முத்துமாரியும், குழந்தையும் உயிரிழந்ததாகக் கூறி அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் மற்றும் போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, மருத்துவர்கள் தவறிழைத்தது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து, அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.












Click it and Unblock the Notifications