“சோறு கூட போடுறோம்.. ஓட்டுப் போட மாட்டோம்”.. பாஜக நிர்வாகி பேச்சால் அதிர்ந்த நயினார் நாகேந்திரன்!
விருதுநகர்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் விருதுநகர் பாஜக நிர்வாகி ஒருவர், "உங்களுக்கு சாப்பாடு கூட போடுறோம். ஆனால், ஓட்டுப் போட மாட்டோம் என எல்லாரும் சொல்றாங்க" எனத் தெரிவித்ததால் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. கூட்டணிகள் தொடர்பான பேச்சுகளும் சூடுபிடித்துள்ளன.

அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ள வேறு சில கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைய உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்படி பழனிசாமி கடந்த 7ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவும் சட்டமன்ற தேர்தல் பணிகளில் விறுவிறுப்பு காட்டி வருகிறது. அதிமுக உடன் கூட்டணி அமைந்த பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 முறை தமிழகம் வந்து சென்றுள்ளார். தமிழகத்தில் இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தீவிரமாக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும் என நயினார் நாகேந்திரன் கூறி வருகிறார்.
இந்நிலையில் விருதுநகரில் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், இதுவரை முடிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கும் பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது அங்கு வந்த பாஜக பூட் கமிட்டி நிர்வாகி ஒருவர், "நான் தேர்தலில் நின்றேன். பொதுமக்களிடம் சென்றால் சோறு கூட போடுகிறோம்.. ஆனால் உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம் எனச் சொல்கிறார்கள்" என நயினார் நாகேந்திரன் கூறினார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், பாஜக நிர்வாகி இப்படி வெளிப்படையாக தெரிவித்ததால் அதிர்ந்து போன நிர்வாகிகள் அதனை பிறகு பேசிக் கொள்ளலாம் என சமாளித்து அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications