இதுதான் விருதுநகர் வீரம்.. மிளகாய் பொடியை வீசி சங்கிலி பறித்த கொள்ளையனை மிரள விட்ட எஸ்ஐ மனைவி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஜவுளிக்கடை மற்றும் நைட்டி தயாரிக்கும் தனது அண்ணணின் கடையில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி முத்துமாரி என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று கடையை திறக்க முத்துமாரி வந்த போது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர் , கண் இமைக்கும் நேரத்தில் மிளகாய் பொடியை வீசி தங்கசங்கிலியை பறித்தார். அப்போது கொள்ளையனிடம் துணிச்சலுடன் போராடி நகையை சப்-இன்ஸ்பெக்டர் மனைவி முத்துமாரி மீட்டார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் செண்பகத்தோப்பு சாலையில் வள்ளிமயில் ராஜா என்பவர் ஜவுளிக்கடை மற்றும் நைட்டி தயாரிக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ராஜபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக இருக்கிறார். இவரது கடையில் வள்ளிமயில் ராஜாவின் தங்கையான முத்துமாரி (வயது 38), பணியாற்றி வருகிறார். அண்ணனின் கடையை பார்த்துக் கொண்டு பணியாற்றி வருகிறார் முத்துமாரி.

முத்துமாரியின் கணவர் சுரேஷ், ராஜபாளையம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கிறார். பொதுவாக தினமும் கவுன்சிலர் வள்ளிமயில் ராஜா தான் கடையை திறப்பது வழக்கம். உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால் கடையை திறப்பதற்காக நேற்று காலை தனது தங்கை முத்துமாரியை அனுப்பி வைத்திருக்கிறார். முத்துமாரி கடையை திறந்தபோது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த நபர் ஒருவர், கண் இமைக்கும் நேரத்தில் முத்துமாரியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயற்சித்துள்ளார்.
சுதாரித்து கொண்ட முத்துமாரி சங்கிலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் பாதிச்சங்கிலி அறுந்து கொள்ளையன் கையில் சிக்கிவிட்டது. உடனே முத்துமாரி, அந்த நபரின் கையில் இருந்த சங்கிலியையும் போராடி பிடித்துக்கொண்டு கொள்ளையனிடம் விடாமல் போராடினார். நகையை மீட்க கண் எரிச்சலையும் தாங்கிக்கொண்டு கொள்ளையனுடன் கடுமையாக போராடி இருக்கிறார் எஸ்ஐ மனைவி முத்துமாரி. இதற்கிடையே அவரது சத்தம் கேட்டு, உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தார்கள். உடனே சுதாரித்த கொள்ளையன், இனிமேல் இருந்தால் தர்ம அடி கிடைக்கும் என்பதை உணர்ந்து, உடனே நகையை விட்டுவிட்டு வெளியே ஓடி இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றான்.
இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி பிரீத்தி, ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். சங்கிலி பறிப்பு முயற்சி நடந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்கள்.
அதில் கொள்ளை முயற்சி சம்பவம் முழுமையாக பதிவாகி இருந்தது. அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். தன் மீது மிளகாய் பொடியை வீசி சங்கிலியை பறித்த கொள்ளையனிடம் போராடி, நகையை மீட்ட முத்துமாரி குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்க்கும் பலர் எஸ்ஐ மனைவி முத்துமாரியின் துணிச்சலை பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications