கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜோபைடன்.. உடல்வலி, தொண்டை வலியால் அவதி.. டாக்டர் வெளியிட்ட ரிப்போர்ட்
வாஷிங்கடன்: அமெரிக்க அதிபர் ஜோபைடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு உடல் வலி, தொண்டை வலியால் அவதிப்படுவதாக டாக்டர் கூறியுள்ளார்.
சீனாவில் 2019ல் பரவ துவங்கிய கொரோனா வைரஸ் இன்னும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தற்போது அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது.
இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனா தடுப்பூசி செலுத்த மக்கள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜோபைடனுக்கு கொரோனா
கடந்த ஆண்டு பரவிய ஓமிக்ரான் வைரஸின் வழித்தோன்றலான பிஏ5 எனும் மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் அவரை தாக்கியுள்ளது. இதுதான் தற்போது அமெரிக்காவில் பரவி வருகிறது. அந்த நாட்டின் பெரும்பான்மையானவர்கள் இந்த வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் ஜோபைடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஜோபைடனுக்கு சிகிச்சை
அதாவது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த வியாழக்கிழமை கொரோனா பாதிப்பு உறுதியானது. லேசான அறிகுறி இருந்த நிலையில் பரிசோதனை செய்ததில் ஜோபைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜோபைடன் வெள்ளை மாளிகையில் தனிமையில் உள்ளார். அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

உடல்வலி, தொண்டை வலியால் அவதி
இந்நிலையில் தான் ஜோ பைடனின் உடல் நலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ஜோபைடனின் டாக்டரான கெவின் ஓ கானர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‛‛ஜோபைடன் முதலில் மூக்கு ஒழுகல், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார். தற்போது இந்த அறிகுறிகளின் பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் உடல் வலி, தொண்டை வலி உள்ளது. இரத்த அழுத்தம் மற்றும் சுவாசத்திறன் இயல்பாகவே உள்ளது. மூச்சுத்திணறல் இல்லை'' என குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

4 தடுப்பூசி டோஸ் செலுத்தி ஜோபைடன்
முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஜோபைடன் நான்கு தடுப்பூசி டோஸ்களை பெற்றுள்ளார். இருப்பினும் அவருக்கு லேசான அறிகுறிகள் தோன்றியதை தொடர்ந்து சோதனையில் கொரோனா உறுதியானது. தற்போது தனிமையில் உள்ள ஜோபைடன் வைரஸ் தடுப்பு மருந்தான பாக்ஸ்லோவிட் எடுக்க துவங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications