மனித சடலத்திற்குள் உயிருடன் பாம்பு.. போஸ்ட்மார்ட்டம் செய்த போது அதிர்ச்சி.. அலறி ஓடிய பெண் ஊழியர்!
வாஷிங்டன்: பிரேத பரிசோதனையின் போது இறந்த மனித உடலில் இருந்து, உயிருடன் பாம்பு ஒன்று வெளியில் வந்ததைப் பார்த்ததாக அமெரிக்க பிரேத பரிசோதனை ஊழியர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாள்கணக்கில் இறந்த உடல்கள் கவனிக்கப்படாமல் இருந்தால், அது அழுகிப் போய் புழுக்கள் உருவாகும் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இறந்த உடலுக்குள் உயிருடன் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால்.. கேட்கவே கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது.
அமெரிக்காவில்தான் இப்படி ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது.

பிரேத பரிசோதனை ஊழியர்
அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் பிரேத பரிசோதனை செய்யும் ஊழியராக வேலை பார்த்து வருபவர் ஜெசிகா லோகன் என்ற 31 வயது பெண். மருத்துவராக ஆசைப்பட்ட இவர், வீட்டின் பொருளாதாரச் சூழல் காரணமாக பிரேத பரிசோதனை ஊழியராக மாறி விட்டார். ஆனாலும் வித்தியாசமான அனுபவங்களைச் சந்திப்பதால், தான் பார்க்கும் வேலையை விரும்பிச் செய்து வந்துள்ளார்.

உயிருடன் பாம்பு
சுமார் 9 ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்து வரும் ஜெசிகா, அவ்வப்போது பிரேத பரிசோதனையின் போது ஏதாவது வித்தியாசமான சம்பவங்களைப் பார்த்திருக்கிறாராம். ஆனால், அதில் மிகவும் மோசமான அனுபவம், இறந்த உடலில் இருந்து உயிருடன் பாம்பு வெளியில் வந்ததுதான் என்கிறார். அதுவும் சடலத்தின் தொடைப்பகுதியில் இருந்து பாம்பு வெளியில் வந்துள்ளது.

பயத்தில் அலறல்
திடீரென உயிருடன் பாம்பைக் கண்ட ஜெசிகா, பயத்தில் அந்த அறையைச் சுற்றி அலறியபடி ஓடியுள்ளார். மற்றவர்கள் பாம்பை பிடித்து அங்கிருந்து அகற்றிய பிறகே மீண்டும் தன் வேலையை தொடர உடலின் அருகில் சென்றதாகத் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அந்த உடல், ஓடை ஒன்றின் அருகில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே, அப்போது உடலுக்குள் அந்த பாம்பு புகுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதுதான் காரணம்
தனக்கேற்பட்ட இந்த திகில் அனுபவம் குறித்து ஜெசிகா கூறுகையில், "இறந்தவர்களின் உடல்கள் எங்கு எந்த நிலையில் கண்டெடுக்கப்படுகிறது என்பதை பொறுத்து தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடக்கும். குளிரான, உலர்ந்த இடங்களில் உடல்கள் இருந்தால், பூச்சிகள், ஆபத்தான உயிரினங்கள் பிரேதங்களை அணுகாது. ஆனால், சூடான, ஈரப்பதமான இடங்களில் பூச்சிகள் உடலில் அதிகம் இருக்கும்" என்கிறார்.