விமானத்திற்குள் எகிறி குதித்த பைலட்.. ஏர்போர்ட் முழுக்க ஒரே சிரிப்பு! இப்படி ஆகிடுச்சே! என்ன நடந்தது
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏர்போர்ட்டில் விமானி ஒருவர், அதன் ஜன்னல் வழியாக ஏறிக் குதித்துள்ளார். அவர் ஏன் இப்படிச் செய்தார் அங்கே என்ன நடந்தது என்பது குறித்துப் பார்க்கலாம்.
விமான துறை என்பது எப்போதும் அதிக புகழ் வெளிச்சத்தைத் தரக் கூடியது என்றாலும் கூட அதில் லாபத்தைச் சம்பாதிப்பது ரொம்பவே கடினம். கச்சா எண்ணெய் விலை தொடங்கிப் பல விஷயங்கள் விமான துறையைத் தீர்மானிக்கிறது.

எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே விமான துறையில் பெரிய லாபத்தை அடைய முடியும். இதையெல்லாம் கணக்கிடாமல் அதிக ரிஸ்க் எடுத்து, சீக்கிரம் திவால் ஆன நிறுவனங்கள் கிங் பிஷ்ஷர், ஜெட் ஏர்வேஸ் எனப் பல இருக்கிறது.
விமானி: அமெரிக்காவில் அப்படி வெற்றிகரமாக இருக்கும் நிறுவனங்களில் ஒன்று சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்.. குறைந்த விலையில் விமானச் சேவை கொடுத்து அங்கே ஹிட் அடித்த நிறுவனம் தான் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்.. நம்ம ஊரில் இப்போது வெற்றிகரமாக இருக்கும் இண்டிகோ கூட இவர்களைப் பார்த்து அதே பிஸ்னஸ் மாடலை வைத்து ஆரம்பித்தவர்கள் தான். இந்த சவுத்வெஸ்ட் விமானத்தில் சமீபத்தில் வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. நிச்சயமாக இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாம் பார்த்திருக்கவே மாட்டோம்.
அதாவது எந்தவொரு விமானமும் எவ்வளவு நேரம் பறக்கிறதோ அவ்வளவு பணத்தைச் சம்பாதிக்கிறது என்று அர்த்தம். எனவே, விமான நிறுவனங்கள் முடிந்தவரை ஏர்போர்டில் குறைவான நேரம் மட்டுமே இருக்கவே விரும்புவார்கள். அப்படி விமானம் சொன்ன நேரத்தில் கிளம்ப வேண்டும் என்பதற்காகத் தான் இவர் இப்படிச் செய்துள்ளார்.
விமானி செய்த செயல்: அதாவது சவுத்வெஸ்ட் விமானத்தில் பயணி ஒருவர் தற்செயலாக காக்பிட் கதவை உள்பக்கம் லாக் செய்துவிடவே, விமானம் உரிய நேரத்தில் கிளம்ப விமானி ஒருவர் விமானி அறைக்குள் ஜன்னல் வழியாக ஏறிக் குதித்துள்ளார்.
இந்த சம்பவம் மே மாதம் கடைசி வாரத்தில் சான் டியாகோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்துள்ளது. இந்தப் படத்தை எடுத்த மேக்ஸ் ரெக்ஸ்ரோட் என்ற பயணி, "இது ஜோக் இல்லை. பயணி ஒருவர் எதிர்பாராத விதமாக விமானத்தின் கதவைச் சாத்தவே அது உள்பக்கம் லாக் ஆகிவிட்டது. இதையடுத்து வேறு வழியின்றி விமானி ஒருவர், விமானி அறைக்குள் ஜன்னல் வழியாக ஏறிக் குதித்தார்" என்று அந்தப் படத்தைப் பதிவிட்டுள்ளார்.
அந்த விமானம் சான் டியாகோவில் இருந்து சாக்ரமெண்டோவுக்குச் செல்ல இருந்தது. அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விமானம் சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக இந்த பைலட் செய்த காரியத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து விமான நிறுவனம் சார்பிலும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
என்ன நடந்தது: அதில், "போர்டிங் செய்யும் போது அனைத்து பயணிகளும் விமானப் பணிப்பெண்கள் உள்ளே இருந்தனர். பயணி ஒருவர் முன்பக்கம் இருந்த கழிவறை பயன்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகக் கழிவறைக்குப் பதிலாக அவர் விமானிகள் இருக்கும் காக்பிட் கதவைச் சாத்திவிட்டார். இதனால் இது உள்பக்கம் லாக் ஆகிவிட்டது. இதையடுத்து எங்கள் விமானிகள் ஒருவர் ஜன்னல் வழியாக உள்ளே சென்று காக்பிட் கதவைத் திறந்தார்" என்று கூறப்பட்டுள்ளது.
துரிதமாக அந்த பைலட் செயல்பட்டதால் விமானம் வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே தாமதமாகக் கிளம்பியுள்ளது. பைலட் இதைச் செய்யவில்லை என்றால் மெக்கானிக் அழைக்கப்பட்டிருப்பார். அப்போது விமானம் கிளம்ப அதிக தாமதம் ஆகியிருக்கும். துரிதமாகச் செயல்பட்ட இந்த பைலட்டை பலரும் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications