துப்பாக்கியிலிருந்து சீறிய தோட்டாக்கள்! அலறியடித்து ஓடிய மக்கள்! அமெரிக்காவில் மர்மநபர் வெறிச் செயல்
வாஷிங்டன் : அமெரிக்காவின் நியூயார்க் அருகே ப்ரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ள நிலையில், மர்ம நபரை தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் நியூயார்க் அருகே உள்ள புரூக்ளின் நகரமும் உண்டு. எப்போதும் மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த நகரத்தில் தான் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் ரயிலுக்காக நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர். காலை நேரம் என்பதால் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.

மர்ம நபர் துப்பாக்கிச் சூடு
இந்த நிலையில் அந்நாட்டு நேரப்படி காலை சுமார் 8 மணிக்கு உள்ளே புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். பலர் அலறியடித்து ஓடிய நிலையில் சிக்கிக் கொண்ட பலர் குண்டடிபட்டு மயங்கி விழுந்தனர். இந்த கொடூரமான தாக்குதலில் 16 பேர் வரை காயமடைந்த நிலையில் பலத்த போராட்டத்திற்குப் பிறகு போலீசார் மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் தப்பிச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் பரபரப்பு
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த காட்சிகளும், காயம் அடைந்தவர்களை ரத்தம் சொட்ட சொட்ட அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பதை பதைக்க வைக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து நியூயார்க் காவல்துறை வெளியிட்டுள்ள பதிவில், தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்த தாக்குதல் காரணமாக பொதுமக்கள் புரூக்ளின் நான்காவது தெருவுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் சுற்றுலாப் பயணிகள் பயணங்கள் தாமதமாகலாம் என கூறியுள்ளனர்.

வெடிகுண்டுகள் இல்லை
முன்னதாக அந்த மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அங்கு செயல்படும் வகையில் வெடி பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. பல கட்ட சோதனைகள் மற்றும் தேடுதலுக்குப் பிறகு, துப்பாகிச் சூடு நடத்திய நபர் தலைமறைவானார் எனவும், இந்த நேரத்தில் சுரங்கப்பாதை நிலையத்தில் வெடிக்கும் சாதனங்கள் எதுவும் இல்லை என்று நியூயார்க் போலீசார் தெரிவித்தனர்.

உயிருக்கு ஆபத்தில்லை
இந்நிலையில் புரூக்ளின் துப்பாக்கிச் சூடு பயங்கரவாத செயலாக என்ற கோணத்தில் விசாரிக்கப்படவில்லை நியூயார்க் போலீசார் கூறியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் அதிகாரிகள் 10 பேர் சுடப்பட்டனர், ஆனால் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்று கூறியுள்ளனர். நியூயார்க் நகர போலீஸ் கமிஷனர் கீச்சன் செவெல் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இது தற்போது பயங்கரவாத செயலாக விசாரிக்கப்படவில்லை. "இந்த வழக்கின் விளைவாக உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் யாரும் இல்லை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications