சீன அதிபரை சந்திக்கும் அமெரிக்க அதிபர் பைடன்.. மோதல் அதிகரித்து வரும் நிலையில் திடீர் 'ட்விஸ்ட்'
வாஷிங்டன்: உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளின் அதிபர்கள் இந்த ஆண்டு இறுதியில் காணொலி வாயிலாகச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்காவின் 46ஆவது அதிபரானர் ஜோ பைடன். அதன் பிறகு அவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் சந்தித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தான், ரஷ்யா அதிபர் புதின் அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பைடன் அதிபரான பிறகு நடந்த முக்கியமான சந்திப்பு அதுவாகும்.

அதிபர்கள் சந்திப்பு
இந்தச் சூழலில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் பைடன் இந்த ஆண்டு இறுதியில் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காணொலி காட்சி மூலம் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. காணொலி மூலம் இரு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இரு பெரும் நாடுகளின் அதிபர்களின் இந்த சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஜி20 மாநாடு
இது குறித்து அந்த அதிகாரி மேலும் கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளாகவே சீன அதிபர் ஜி ஜின்பிங் சர்வதேச தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. எனவே, இந்த சந்திப்பு காணொலி மூலம் நடைபெற்றாலும் கூட முக்கியமான ஒன்றாகவே கருதுகிறோம்" என்றார். இந்த மாதம் ரோமில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஜி ஜின்பிங் கலந்து கொண்டிருந்தால், அங்கேயே அதிபர் பைடன் - ஜி ஜின்பிங் மீட்டிங் நடந்திருக்கும்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் சீனாவின் உயர்மட்ட தூதர் ஒருவரை சுவிட்சர்லாந்தில் சந்தித்து நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு முடிந்த சில மணி நேரத்தில் அமெரிக்க மற்றும் சீன அதிபர்களின் சந்திப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Array
ஒரு புறம் தைவானை முழுமையாகத் தனது நாட்டுடன் இணைக்கும் முயற்சிகளைச் சீனா தீவிரப்படுத்துகிறது. மறுபுறம் அமெரிக்கா அணு ஆயுத ஆற்றல் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு விற்றுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்து வருகிறது. மேலும், இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் மாறி மாறி வரி விகிதங்களையும் அதிகரிப்பதால், இது சர்வதேச அளவிலும் மிக மோசமான சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

முதல்முறை
இது போன்ற தேவையற்ற சிக்கல்களையும் குழப்பங்களையும் தவிர்க்க இந்த சந்திப்பு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் பைடன் சந்தித்ததில்லை. இரண்டு முறை மட்டுமே தொலைப்பேசி மூலம் பேசியுள்ளனர். அதிலும் கடைசியாக நடைபெற்ற தொலைப்பேசி உரையாடலில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகவும் அந்த ஃபோன் கால் 90 நிமிடங்கள் வரை நீண்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications