அருணாச்சல பிரதேசத்தை ஆக்கிரமிக்க ரெடியாகும் சீனா.. அமெரிக்கா பகீர் ரிப்பேர்ட்.. .. திடீர் பதற்றம்
வாஷிங்டன்: இந்தியா சீனா இடையே எல்லையில் நிலவிய மோதல் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே முடிவுக்கு வந்தது. இருப்பினும், அடுத்து வரும் ஆண்டுகளில் இன்னொரு புதிய மோதல் உருவாகலாம் என்று பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ரிப்போர்ட்டை அமெரிக்க பென்டகன் வெளியிட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியா சீனா இடையே பல காலமாகவே எல்லையில் மோதல் போக்கே நிலவி வருகிறது. இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிகளைச் சீனா சொந்தம் கொண்டாடுவதே இந்த மோதலுக்குப் பிரதானக் காரணம். இதனால் அவ்வப்போது இரு நாடுகளுக்கும் இடையே மோதலும் கூட ஏற்படும். கடைசியாக 2020ல் கல்வான் பகுதியில் மோதல் போக்கு ஏற்பட்டிருந்தது. சீனாவின் அத்துமீறலே அதற்குக் காரணமாக இருந்தது.

இந்தியா சீனா
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இரு தரப்பிற்கும் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு பலகட்டப் பேச்சுவார்த்தைக்கு பிறகே நிலைமை சீரானது. கிழக்கு லடாக்கில் சில ஆண்டுகளுக்கு பிறகே பதற்றம் முடிவுக்கு வந்தது. இருப்பினும், அடுத்து வரும் ஆண்டுகளில் இன்னொரு புதிய மோதல் உருவாகலாம் என்று பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் திட்டம் தொடர்பாக அமெரிக்க பென்டகன் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ரிப்போர்ட்டில் தான் இந்தத் தகவல்கள் கூறப்பட்டுள்ளது.
அதாவது தைவான் போலவே அருணாச்சலப் பிரதேசத்திற்கும் சீனா முக்கியத்துவம் கொடுக்கிறதாம். இதனால் இந்தியா சீனா இடையே அருணாச்சல பிரதேசத்தை மையமாக வைத்து ஒரு மோதல் ஏற்படக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அருணாச்சல பிரதேசம்
அருணாச்சல பிரதேசம், தைவான் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளைச் சீனா உரிமை கோரி வருவதாகவும் 2049க்குள் கிரேட்டர் சீனா உருவாக்குவதே அவர்களின் திட்டம் என ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.. இதற்காகப் போரிட்டு வெல்லக்கூடிய திறன் கொண்ட உலகத் தரம் வாய்ந்த ராணுவத்தையும் சீனா உருவாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா நிராகரிப்பு
அதேநேரம் சீனாவின் இந்த உரிமை கோரலை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தே வந்துள்ளது. அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்துள்ளது.. இப்போதும் உள்ளது, எதிர்காலத்திலும் இருக்கும் என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. அருணாச்சல பிரதேசம் மீதான சீனா உரிமை கோரல் என்பது இந்தியாவின் இறையாண்மையில் அத்துமீறல் என்றும் அதை இந்தியா திட்டவட்டமாக மறுக்கிறது.
சிக்கல் என்ன
இருப்பினும், அதை ஏற்காத சீனா, அருணாச்சலப் பிரதேசம் தனக்குச் சொந்தமானது எனக் கூறி தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கி வருகிறது. நமது அருணாச்சல பிரதேசத்தைச் சீனா, தெற்கு திபெத் அல்லது ஜங்னான் என்று அழைக்கிறது. 1914ல் பிரிட்டனால் வரையப்பட்ட மெக்மோகன் எல்லைக் கோட்டை சீனா ஏற்க மறுப்பதே இதற்குக் காரணமாகும். அப்போது இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் அப்போது சுதந்திரமாக இருந்த திபெத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இதுவாகும்.

ஆனால், இதை ஏற்க மறுக்கும் சீனா, அருணாச்சலப் பிரதேசம் தனக்குச் சொந்தமானது என்கிறது. இருப்பினும், முதலில் சீனா தவாங் என்ற பகுதிக்கு மட்டுமே உரிமை கோரியது. பின்னர், அருணாச்சல பிரதேசம் முழுக்க தனக்குச் சொந்தம் என அத்துமீறி உரிமை கோரியது. மேலும், இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிகளுக்குச் சீனா புதிய பெயர்களை வைப்பதையும் தொடர்ந்து செய்து வருகிறது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்தே வருகிறது.












Click it and Unblock the Notifications