அடுத்த மாதம் உச்சமடையும் கொரோனா 2ஆம் அலை.. தினசரி உயிரிழப்பு 5000ஐ தாண்டும்.. ஆய்வில் செம ஷாக் தகவல்
வாஷிங்டன்: கொரோனா வைரசின் இரண்டாம் அலை இந்தியாவில் மே மாதத்தின் மத்தியில் உச்சமடையும் என்றும் அப்போது தினசரி உயிரிழப்புகளும் 5,000 தாண்ட வாய்ப்புள்ளதாகவும் வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை பற்றி அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் புதிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. வரும் காலங்களில் கொரோனா பரவல் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் வகையில் 'COVID-19 projections' என்ற ஆய்வை வெளியிட்டுள்ளது.
அதில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை இந்தியாவில் வரும் காலங்களில் மோசமடையும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் நாடு முழுவதும் தடுப்பூசி திட்டத்தின் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5000ஐ கடக்கும் கொரோனா உயிரிழப்புகள்
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மே 10ஆம் தேதி உச்சமடையும். அப்போது தினசரி கொரோனா உயிரிழப்புகள் 5600ஆக இருக்கும். ஏப்ரல் 12 முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் கொரோனா உயிரிழப்புகள் 3.29 லட்சமாக இறுக்கும். ஜூன் இறுதியில் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6,65,000ஆக உயரவும் வாய்ப்பு உள்ளது.

மாஸ்க் அணிந்தால் உயிரிழப்பு குறையும்
அதேநேரம் ஏப்ரல் இறுதிக்குள் அனைவரும் பொது இடங்களில் மாஸ்க்குகளை அணிந்தால் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையை 70,000ஆக குறைக்க முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் பிப்ரவரி நடுப்பகுதி வரையில் இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்திருந்தது. அதன் பின்னரே வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. ஏப்ரல் முதல் வாரத்தையும் இரண்டாம் வாரத்தையும் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு 71% கொரோனா உயிரிழப்புகள் 55% அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடும் பணி
130 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் ஏற்கனவே 24% மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மூலம் அதிக அளவிலான மக்களைக் காப்பாற்ற முடியும் எனவும் இதன் மூலம் சுமார் 85,600 பேரின் உயிரைக் காக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

10 லட்சத்தை தாண்டும்
இதேபோல அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 8 முதல் 10 லட்சம் வரை செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து மிச்சிகன் பல்கலைக்கழகத்திலுள்ள தொற்றுநோயியல் வல்லுநர் டாக்டர் பிரமார் முகர்ஜி கூறுகையில், மே மத்தியில் கொரோனா உயிரிழப்புகளும் 4500 தாண்ட வாய்ப்புள்ளது.

கடைசி அலை இல்லை
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைவாகப் பதிவு செய்யப்படுகிறது. உண்மை நிலைமை மிக மோசமாக இருக்கும். மாஸ்க்குகளை கட்டாயமாக்குவது, ஊரடங்கு கட்டுப்பாடுகள், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது ஆகியவை மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இது கொரோனா பரவலின் கடைசி அலையும் இல்லை தற்போது கண்டறியப்பட்டுள்ளது கடைசி கொரோனா வகையும் இல்லை. எனவே சுகாதார கட்டமைப்பை வலிமையாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்

இந்தியாவில் கொரோனா பரவல்
ஏப்ரல் மாதம் இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளின் ஐந்தாவது பெரிய காரணியாக கொரோனா மாறியுள்ளதாகவும் அமெரிக்கா வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் இந்தியாவில் 78 ஆயிரமாக இருந்த கொரோனா உயிரிழப்புகள் ஏப்ரலில் மூன்று லட்சத்தைத் தாண்டியது. இதே காலகட்டத்தில் உயிரிழப்புகளும் 970இல் இருந்து ,1500ஐ கடந்துள்ளது. சத்தீஸ்கர், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications