"வாக்குக்கு பணம் கொடுத்த டிரம்ப்.." வெடித்த சர்ச்சை..உற்று பார்க்கும் அமெரிக்க மக்கள்! என்ன நடந்தது?
வாஷிங்டன்: நம்ம ஊரில் தேர்தல் காலம் நெருங்கிவிட்டாலே ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கவே செய்கிறது. லோக்சபா தேர்தல் தொடங்கி உள்ளாட்சித் தேர்தல் வரை இந்த புகார் இருந்து கொண்டே தான் இருக்கும். இதற்கிடையே இந்த பிரச்சினை இப்போது அமெரிக்க அரசியல் வரை சென்றுவிட்டது. அங்கு முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான டிரம்ப் மீது இந்த புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டின் சட்டப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அதன் பிறகு பிரச்சாரம் தொடங்கி அனைத்தையும் தேர்தல் ஆணையம் கண்காணிக்கும்.

ஓட்டுக்குப் பணம்: இந்தியாவில் சட்டப்படி ஓட்டிற்குப் பணம் தருவது சட்டப்படி குற்றமாகும். எந்த வழியில் பணம் அல்லது பரிசுப் பொருட்களைக் கொடுத்தாலும் நடவடிக்கை பாயும். அதாவது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு ஆரத்தி எடுக்கும் போது தட்டில் பணத்தை வைத்தால் அது குற்றம் இல்லை. அதேநேரம் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் அதைச் செய்தால் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இங்கு ஓட்டிற்குப் பணம் தருவதாக எழும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இந்த குற்றச்சாட்டு இப்போது அமெரிக்கா வரை கூட சென்றுவிட்டது. டிரம்ப் வாக்கிற்குப் பணம் தந்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்,
இந்தச் சம்பவம் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் உள்ள ஒரு சிறிய மளிகைக் கடையில் தான் நடந்துள்ளது. அங்கு மக்களைச் சந்தித்த டிரம்ப், அங்குக் கடைக்கு வந்த பெண் வாங்கிய மளிகை பொருட்களுக்கு $100 கொடுத்தார். இதை வீடியோவாக எடுத்து அவரது பிரச்சார டீம் தான் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது.
என்ன நடந்தது: அதாவது பென்சில்வேனியாவில் உள்ள கிட்டானிங்கில் உள்ள ஒரு உள்ளூர் மளிகைக் கடைக்கு டிரம்ப் சென்றுள்ளார். அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் டிரம்ப் உரையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அங்குத் தனது மூன்று குழந்தைகளுடன் தனியாக ஷாப்பிங் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் டிரம்ப் பேசினார். அப்போது தனது பர்ஸ்ஸில் இருந்து 100 டாலரை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்தார். மேலும், அவரது மகனையும் சில நொடிகள் கொஞ்சினார்.
பெண் வாக்காளர்களைக் கவரவே டிரம்ப் இதுபோல செய்துள்ளார். ஏனென்றால் அமெரிக்க அரசியலில் பெண்கள் பொதுவாகவே ஜனநாயக கட்சிக்கே வாக்களிப்பார்கள். அந்த பெண் வாக்காளர்களைக் கவரும் வகையிலேயே டிரம்ப் இதைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் டிரம்பின் இந்த செயல் இரு வேறு ரியாக்ஷனை அங்குக் கிளப்பியுள்ளது. ஒரு தரப்பினர் டிரம்பின் செயலை பாராட்டி வருகிறார்கள். ஏழைப் பெண்ணுக்கு டிரம்ப் உதவியிருப்பது ஒரு நல்ல செயல் எனப் பாராட்டுகிறார்கள்.
புகார்: அதேநேரம் மற்றொரு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தேர்தல் காலத்தில் மக்களுக்கு இதுபோல பணம் அளிப்பது சட்ட விரோதம் என்றும் இது வாக்குக்குப் பணம் தருவதைப் போலத் தான் என்றும் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அந்நாட்டின் பெடரல் சட்டத்தை டிரம்ப் மீறியுள்ளதாகவும் இதனால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
விளக்கம்: இந்த விவகாரம் குறித்து டிரம்பின் பிரச்சார குழு எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை. அதேநேரம் டிரம்பின் ஆதரவாளர்கள் இதை ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் நிகழ்வாகக் கருத முடியாது என்கிறார்கள். இது நன்கொடை போலத் தான் என்றும் இது தேர்தல் விதிகளை மீறுவதாக இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். நீங்க சொல்லுங்க டிரம்ப் செய்தது சரியா தவறா..?












Click it and Unblock the Notifications