ஓ.. என்னையவே எதிர்க்கிறியா? 3 வருஷமா எங்க போனீங்க? உக்ரைன் அதிபரை விட்டு விளாசிய டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன்: போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்கவில்லை என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா மீது அதிருப்தியில் உள்ளார். இதனை வெளிப்படையாக அவர் கூறிய நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை கடுமையாக திட்டி தீர்த்துள்ளார்.
உக்ரைன் மீது கடந்த 2022ம் ஆண்டு ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. இந்த போர் 3வது ஆண்டை இன்னும் சில நாட்களில் நிறைவு செய்ய உள்ளது. தற்போது போர் நிறுத்தம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆர்வமாக உள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். விரைவில் இருவரும் சந்தித்து பேச உள்ளனர். இதற்கு முன்னோட்டமாக சவுதி அரேபியாவில் நேற்று அமெரிக்கா மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை என்பது நடந்தது.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அதிபர் விளாடிமிர் புதினின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, டொனால்ட் டிரம்பின் தேசிய ஆலோசகர் மைக் வால்ட்ஸ், மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இருதரப்பிலும் உயர்மட்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தரப்பில் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதுபற்றி விளாடிமிர ஜெலன்ஸ்கி ''சவுதியில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்குபெற உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. உக்ரைன் அதிகாரிகள் இல்லாமல் நடக்கும் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் பலனளிக்காது. பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகளையும் ஏற்கமாட்டோம்'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் அமெரிக்கா மீது அதிருப்தியில் உள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை, அந்த நாட்டுஅதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக திட்டி உள்ளார். போர் நிறுத்தம் தொடர்பான ரஷ்யா உடனான பேச்சுக்கு உக்ரைன் அழைக்கப்படாமல் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்க மாட்டோம் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளாரே? என்று டொனால்ட் டிரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு டொனால்ட் டிரம்ப்,‛‛ ஓ.. நானும் கேள்வி பட்டேன்.. நாங்க அவரை அழைக்கவில்லை.. சரி அது இருக்கட்டும்.. கடந்த 3 ஆண்டுகளாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? இந்த 3 ஆண்டில் பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் செய்திருக்கலாமே? அப்படி நடந்து இருந்தால் பேச்சுவார்த்தையை ஏன் நாங்கள் தொடங்கி இருக்க போகிறோம்?
இந்த போரை இதற்கு முன்பே நிறுத்தம் செய்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. என்னை பொறுத்தவரை ரஷ்யாவுடன் போரை தொடங்கி இருக்க கூடாது. ஜெலன்ஸ்கி மிகவும் திறமையற்ற தலைவர். பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தெரியாதவர்'' என்று சாடியுள்ளார்.
மேலும் உக்ரைனில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இதுபற்றி டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ‛‛உக்ரைனுக்கு தேர்தல் நடத்த வேண்டும். இது ரஷ்யாவின் எண்ணமாக மட்டும் இல்லை. உலகின் பல நாடுகளின் எண்ணமாக இருக்கிறது'' என்றார். இதன்மூலம் உக்ரைனில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை தேர்தல் மூலம் தோற்கடித்துவிட்டு புதிய அதிபரை கொண்டு வரலாம். இதனால் டொனால்ட் டிரம்பும் தற்போது உக்ரைன் தேர்தல் தொடர்பாக விருப்பம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications