உயிருக்கு உத்தரவாதமில்லை.. அமெரிக்காவுக்குள் நுழையாதீங்க! ஈரான் கால்பந்து அணிக்கு டிரம்ப் வார்னிங்!
வாஷிங்டன்: ஈரான் மீது அறிவிக்கப்படாத போரில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டியை விளையாட ஈரான் அணி, அமெரிக்காவுக்கு வர இருக்கிறது. இப்படி அமெரிக்காவுக்குள் நுழைந்தால் அந்த அணி வீரர்களின் பாதுகாப்புக்கு கேரண்டி கிடையாது என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
விளையாட்டு போட்டியில் பங்கேற்க வரும் வீரர்களை கூட பாதுகாக்க முடியவில்லை எனில், அப்புறம் என்ன அதிபர் அவர்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

2026 ஃபிஃபா உலகக் கோப்பை
வட அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 ஃபிஃபா உலகக் கோப்பை குறித்து டிரம்பின் இந்த கருத்து, சில நாட்களுக்கு முன்பு அளித்த கருத்துக்கு நேர் மாறானது. இது சர்வதேச கால்பந்து உலகில் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், "ஈரானிய தேசிய கால்பந்து அணி உலகக் கோப்பையில் பங்கேற்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அவர்களின் சொந்த வாழ்க்கை மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளும்போது அவர்கள் அங்கு இருப்பது பொருத்தமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
வாக்கு கொடுத்த டிரம்ப்
இதற்கு 2 நாட்களுக்கு முன்னர், ஃபிஃபா தலைவர் ஜியானி இன்பான்டினோ, ஈரான் அணியை உலகக் கோப்பையில் வரவேற்க டிரம்ப் உறுதியளித்ததாகக் கூறியிருந்தார். அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து உலகக் கோப்பையை நடத்துகின்றன.
செவ்வாய்கிழமை அன்று இன்பான்டினோ தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "ஈரானின் தற்போதைய சூழ்நிலை மற்றும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்க ஈரான் தகுதி பெற்றுள்ளதாகவும் விவாதித்தோம். கலந்துரையாடலின்போது, அமெரிக்காவில் நடைபெறும் போட்டியில் ஈரான் அணி பங்கேற்க நிச்சயம் வரவேற்கப்படும் என அதிபர் டிரம்ப் மீண்டும் கூறினார்" என்று தெரிவித்தார்.
மாற்றி பேசிய டிரம்ப்
மேலும், "மக்கள் அனைவரும் ஒன்றுபட ஃபிஃபா உலகக் கோப்பை போன்ற ஒரு நிகழ்வு முன்னெப்போதையும் விட இப்போது தேவைப்படுகிறது. கால்பந்து உலகை ஒன்றிணைக்கிறது என்பதை இது மீண்டும் காட்டுவதால், அமெரிக்க அதிபருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் இன்பான்டினோ குறிப்பிட்டிருந்தார்.
ஈரான் மீது குண்டுவீச்சு
இதற்கிடையே, புதன்கிழமை அன்று, ஈரானிய விளையாட்டுத் துறை அமைச்சர் அஹ்மத் டோன்யாமாலி, "எந்தச் சூழ்நிலையிலும் எங்களால் உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாது" என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேலின் ஆதரவுடன் அமெரிக்கா, ஈரான் மீது குண்டுவீசத் தொடங்கியதிலிருந்து, உலகக் கோப்பை குறித்துப் பேசிய முதல் அரசுப் பிரதிநிதி இவர்தான்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை
இதுவரை, ஈரான் பங்கேற்பது குறித்து ஃபிஃபா அல்லது ஈரான் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. போட்டியின் குரூப் ஜி பிரிவில், ஈரான் பெல்ஜியம், எகிப்து மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. அவர்களின் மூன்று போட்டிகளும் அமெரிக்காவில் தான் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு போட்டிகள் லாஸ் ஏஞ்சல்ஸிலும், ஒரு போட்டி சியாட்டிலிலும் நடைபெறும்.












Click it and Unblock the Notifications