டிரம்ப் வென்றதும் பணக்காரர்கள் செம குஷி! பல லட்சம் கோடி உயர்ந்த சொத்து மதிப்பு! யாருக்கு அதிக லாபம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்ற உடனேயே அங்குள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக டாப் 5 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 4.4 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் இது ஒட்டுமொத்த கேரள ஜிடிபியில் (₹11.06 லட்சம் கோடி) மூன்றில் ஒரு பங்காகும்.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் பெரியளவில் வெற்றி பெற்று அதிபராகத் தேர்வாகியுள்ளார். அவர் அடுத்தாண்டு ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராகத் பதவியேற்க இருக்கிறார்.

இதற்கிடையே டிரம்ப் வென்ற ஆட்சிக்கு வந்த முதல் நாளே அங்கு டாப் 5 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 53 மில்லியன் டாலர் (சுமார் 4.4 லட்சம் கோடி)அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
எலான் மஸ்க்: குறிப்பாக டெஸ்லா நிறுவனரும் உலகின் டாப் பணக்காரருமான எலான் மஸ்கின் சொத்து அதிகபட்சமாக 20.9 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய் ஆகும். டிரம்பை வெற்றியைத் தொடர்ந்து டெஸ்லாவுக்கு வரி விலக்கு முக்கிய கான்டிராக்ட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டெஸ்லா பங்குகள் மட்டும் 15% உயர்ந்துள்ளது. இதனால் அவரது சொத்து மதிப்பும் 20.9 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதன் மூலம் அவரது தற்போதைய சொத்து மதிப்பு 285.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
லாரி எரிசன்: அவருக்கு அடுத்தபடியாக ஆரக்கிள் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் லாரி எலிசன் என்பவரின் சொத்து மதிப்பு 11.7 மில்லியன் உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில் 98 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். உலகில் இரண்டாவது பெரிய பணக்காரரான லாரி எலிசன் எப்போதும் குடியரசு கட்சியையே ஆதரித்து வந்து போதிலும், டிரம்பிற்கும் இவருக்கும் இடையே தனிப்பட்ட உறவு நன்றாக இருந்தது இல்லை. இதனால் டிரம்பை இவர் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. ஆனாலும், டிரம்ப் வெற்றியால் இவரது சொத்து பல மடங்கு உயர்ந்துள்ளது.
வாரன் பஃபெட்: பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவரும் உலகின் டாப் முதலீட்டாளருமான வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு 7.6 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 64 ஆயிரம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. இப்போது அவரது சொத்து மதிப்பு 147.4 பில்லியன் டாலராக இருக்கிறது. ஜனநாயக கட்சியின் ஆதரவாளராக இருந்த போதும் வாரன் பஃபெட் இந்த முறை தேர்தலில் கமலா ஹாரிஸை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெஃப் பெசோஸ்: அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெஃப் பெசோஸ் சொத்து மதிப்பு 7 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 64 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு 223.5 பில்லியன் டாலராக இருக்கிறது. அமேசான் நிறுவனத்தின் பங்குகள் புதிய உச்சத்திற்குச் சென்றதே இதற்கு முக்கிய காரணமாகும்.
லாரி பேஜ்: கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் இணை நிறுவனரான லாரி பேஜ் சொத்து மதிப்பு $5.3 பில்லியன், அதாவது இந்திய மதிப்பில் 44 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. அவரது சொத்து மதிப்பு இப்போது 14.6 மில்லியன் டாலராக இருக்கிறது. இவரும் இந்தத் தேர்தலில் யாரையும் ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி டாப் 5 பணக்காரர்களின் சொத்தும் பயங்கரமாக அதிகரித்துள்ளது. இதில் நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது டிரம்பை ஆதரிக்காத பணக்காரர்களின் சொத்து மதிப்பும் கூட பல மடங்கு உயர்ந்துள்ளது. டிரம்பின் குடியரசு கட்சி பொதுவாகவே தொழிலதிபர்களுக்கு ஏற்ற பாலிசியை கொண்டு வரும். இதன் காரணமாகவே அவரை ஆதரிக்கவில்லை என்றாலும் கூட கிட்டதட்ட எல்லா கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பும் அங்கு உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications