நான் ஒரு பட்டனை தட்டினால்.. அடுத்த நொடி ஒட்டுமொத்த உக்ரைனும் முடங்கிவிடும்! எலான் மஸ்க் மிரட்டல்
வாஷிங்டன்: ரஷ்யா உக்ரைன் மோதலை நிறுத்துவது குறித்து டிரம்ப்- ஜெலன்ஸ்கி இடையே நடந்த பேச்சுவார்த்தை வாக்குவாதத்தில் முடிந்தது. இதற்கிடையே இப்போது உக்ரைனை வெளிப்படையாக மிரட்டும் வகையில் எலான் மஸ்க் பேசியிருக்கிறார். தான் நினைத்தால் ஒட்டுமொத்த உக்ரைனின் பாதுகாப்புப் படையும் நொடிகளில் முடங்கிவிடும் என அவர் சொல்லியுள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது.
உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. பைடன் அதிபராக இருந்தவரை உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்களைக் கொடுத்துக் காப்பாற்றி வந்தார். ஆனால், அதன் பிறகு அதிபரான டிரம்ப் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. போரை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த டிரம்ப், இதற்காக முன்னெடுப்புகளையும் தொடங்கினார்.

பேச்சுவார்த்தை
ஆனால், போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் டிரம்ப் தரப்பு உக்ரைனுக்கு அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையேயான சந்திப்பு கூட வாக்குவாதத்திலேயே முடிந்தது. அதன் பிறகு டிரம்ப் உட்பட அவரது நிர்வாகத்தில் உள்ள பலரும் கூட ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி எனக் கூட குறிப்பிட்டு விமர்சித்தனர்.
எலான் மஸ்க்
அதேபோல டிரம்ப் உடன் நெருக்கமாக நட்பைக் கொண்டுள்ள எலான் மஸ்க் கூட ஜெலன்ஸ்கியை கடுமையாக விமர்சித்துள்ளார். ரஷ்யா உடனான போர் தொடர வேண்டும் என உக்ரைன் அதிபர் எதிர்பார்ப்பதாகவும் ஜெலன்ஸ்கி ஒரு மோசமான நபர் என்றும் விமர்சித்திருந்தார். இதற்கிடையே அவர் மீண்டும் ஜெலன்ஸ்கியை விமர்சித்துள்ளார். தான் ஒரு பட்டனை தட்டினால் ஒட்டுமொத்த உக்ரைன் பாதுகாப்பு அமைப்பும் முடங்கி சரிந்துவிடும் என அவர் மிரட்டியுள்ளார்.
மிரட்டல் விடுத்த எலான் மஸ்க்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மோதல் தொடங்கிய சமயத்தில் நான் உக்ரைனுக்காக புதினுடன் நேரடியாக மோதத் தயாராக இருந்தேன். எனது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் தான் உக்ரைன் ராணுவத்தின் முதுகெலும்பாக உள்ளது. நான் அதை ஆஃப் செய்தால் உக்ரைனின் ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப்பும் சரிந்துவிடும்.. தோற்கப் போகிறோம் எனத் தெரிந்தும் உக்ரைன் பல ஆண்டுகளாகச் செய்யும் செயல்களால் பல படுகொலைகள் நடக்கிறது. உண்மையில் சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் கொண்ட எவரும் போரை நிறுத்தவே விரும்புவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
பின்னணி என்ன
கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா நடத்திய தாக்குதலால் உக்ரைன் நாட்டின் தொலைத்தொடர்பு மொத்தமாகச் சேதமடைந்துள்ளன. அந்த நேரத்தில் உக்ரைனில் தகவல் தொடர்பு காலியானது. அப்போது எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் தான் அவர்களுக்கு கை கொடுத்தது. அப்போது முதலே ஸ்டார்லிங் சேவையைத் தான் உக்ரைன் பயன்படுத்தி வருகிறது. ஸ்டார்லிங்கின் குறிப்பிட்ட சில அலைக்கற்றைகளை உக்ரைன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால், பெரும்பாலானவற்றை உக்ரைன் ராணுவமே பயன்படுத்தி வருகிறது. ரஷ்யா தாக்குதலால் உக்ரைன் ராணுவத்தின் தகவல் தொடர்பும் முடங்கியதால், அவர்களும் ஸ்டார்லிங்க் சேவையையே இத்தனை காலம் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் நினைத்தால் ஒட்டுமொத்த உக்ரைன் பாதுகாப்புத் துறையும் முடங்கிவிடும் என எலான் மஸ்க் கூறியுள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது. ராணுவம் போன்ற அதிமுக்கிய துறை வெளிநபருக்குச் சென்றால் அது எந்தளவுக்கு ஆபத்தில் போய் முடியலாம் என்பதையே எலான் மஸ்கின் மிரட்டல் உணர்த்துவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications