எதிர்த்து பேசினாலே ரெய்டு! மாஜி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வீட்டில் இறங்கிய FBI.. எல்லை மீறி டிரம்ப் அடாவடி!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மாஜி தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டன் இப்போது ட்ரம்ப்பை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்தியா மீதான ட்ரம்ப்பின் வரிகளைச் சமீபத்தில் தான் அவர் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். இது இந்தியா அமெரிக்கா உறவைப் பாதிக்கும் என்று அவர் சொல்லியிருந்தார். இதற்கிடையே இதைச் சொன்ன மறுநாளே அவரது வீட்டில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் உக்ரைன் போர் தொடர்பாக இந்தியா மீது வரிகளை விதித்திருந்தார். அதில் 25% வரி ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. இன்னொரு 25% வரி இன்னும் சில நாட்களில் அமலுக்கு வரவுள்ளது. இதனால் இந்திய வணிகர்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்யப் பெரும் சிரமத்தை எதிர்கொள்வார்கள். மேலும், இது இந்தியா அமெரிக்கா உறவைக் கடுமையாகப் பாதிக்கிறது.

பாதிப்பு அதிகம்
இந்தியாவுடனான உறவை இழந்தால் அமெரிக்காவுக்கே பாதிப்பு அதிகம் என்று சர்வதேச வல்லுநர்கள் கூறுகிறார்கள். சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க இந்தியாவின் ஆதரவு தேவை என்பதே வல்லுநர்களின் கருத்தாகும். அமெரிக்காவிலேயே கூட பல்வேறு வல்லுநர்கள் இதே கருத்தைத் தான் முன்வைக்கிறார்கள். நாளுக்கு நாள் டிரம்ப் வரி மீதான விமர்சனங்கள் அதிகரித்துவிட்டது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிபர் ட்ரம்ப்பின் மாஜி தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜான் போல்டன் இந்தியா மீதான வரி குறித்து தனகு விமர்சனத்தை முன்வைத்திருந்தார். டிரம்ப்பின் வரி விதிப்பைச் சாடிய அவர், அமெரிக்கா இந்தியா உறவு மிக மோசமாக இருப்பதாகவும் அதற்கு டிரம்ப் மட்டுமே காரணம் என்றும் விமர்சித்தார்.
கடும் தாக்கு
இது தொடர்பாக அவர் மேலும், "உக்ரைன் போரை முடித்து அமைதிக்கான நோபல் பரிசை வாங்க டிரம்ப் முயல்கிறார். இதற்காக அவர் இந்தியா மீது வரி விதித்திருக்கிறார். ஆனால், ரஷ்யாவுக்கு எதிராக எந்த புதிய தடைகளும் விதிக்கப்படவில்லை. ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகம் கொள்முதல் செய்யும் சீனாவுக்கும் வரி அல்லது தடை இல்லை. ஆனால், இந்தியாவுக்கு மட்டும் வரியாம். இந்த லாஜிக் எனக்குப் புரியவே இல்லை" என்று விமர்சித்திருந்தார்.
போல்டன் மேலும் கூறுகையில், "ஆசியாவில் சீனாவின் செல்வாக்கை எதிர்ப்பதற்காக இந்தியாவுடன் உறவுகளைக் கடந்த கால அரசுகள் வளர்த்துள்ளன. ஆனால், இந்தியாவின் மீதான ட்ரம்ப்பின் வரி அச்சுறுத்தல்கள், இந்தியாவைச் சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமாக்கும். இது அமெரிக்காவுக்கே சிக்கல்" என்று அவர் கூறியிருந்தார்.

உடனே ரெய்டு
இதற்கிடையே போல்டன் இந்தக் கருத்தைக் கூறிய மறுநாளே அவரது வீட்டில் எஃப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். ரகசிய ஆவணங்களை முறையாகக் கையாளவில்லை என்ற புகாரில் அவரது இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஜான் போல்டன் கைது செய்யப்படவில்லை. மேலும், அவர் மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை.
டிரம்ப் நிர்வாகம் அல்லது எஃப்.பி.ஐ இதுவரை இந்த ரெய்டு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. ஆனால், எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல், "சட்டத்திற்கு யாரும் அப்பாற்பட்டவர்கள் அல்ல; எஃப்.பி.ஐ அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள்" என்று மட்டும் ட்வீட் செய்தார். அதேநேரம் டிரம்பை விமர்சித்த மறுநாளே அவரது வீட்டில் ரெய்டு நடந்துள்ளது அமெரிக்காவில் பேசுபொருள் ஆகியுள்ளது.












Click it and Unblock the Notifications