வெனிசுலாவிலிருந்து.. அமெரிக்காவுக்கு வந்த தங்க கட்டிகள்! மொத்த மதிப்பு பல நூறு கோடிகள்!
வாஷிங்டன்: சில நாட்களுக்கு முன்னர், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்திருந்தது. இந்நிலையில், தற்போது பலநூறு கோடிகள் மதிப்பிலான தங்க கட்டிகள், வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
மதுரோவை கைது செய்ததற்கு பின்னால், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கைப்பற்றுவதே நோக்கம் என்று பரவலாக பேசப்பட்டிருந்தது. ஆனால், இந்த கைதுக்கு பின்னால், தங்கத்தை கொண்டுவருவதும் நோக்கமாக இருந்திருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

$100 மில்லியன் மதிப்புள்ள தங்கம்
வெனிசுலாவிடமிருந்து $100 மில்லியன் மதிப்புள்ள தங்கத்தை அமெரிக்கா பெற்றிருப்பதாக, அமெரிக்க உள்நாட்டுத் துறைச் செயலர் டக் பர்கம் உறுதிப்படுத்தினார். இந்த தங்கத்தின் இந்திய மதிப்பு ரூ.840 கோடி. வெனிசுலாவின் அரசு நிறுவனமான மினர்வெனுடன் வர்த்தக அனுமதி அளித்ததைத் தொடர்ந்தே, கடந்த வெள்ளிக்கிழமை இந்தத் தங்கம் அமெரிக்காவை வந்தடைந்தது.
தங்கமும் கணிமங்களும்
ஃபாக்ஸ் நியூஸுக்குப் பேட்டியளித்த பர்கம், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு வளமிகுந்த பொற்காலத்தை உறுதியளித்திருந்ததாகக் குறிப்பிட்டார். வெனிசுலாவிடமிருந்து முதலில் தங்கக் கட்டிகள் பெறப்படும் என்றார். "$100 மில்லியன் தங்கம் வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவுக்கு, தொழில்துறை, வணிகப் பயன்பாடுகளுக்காக வந்தது. வெனிசுலாவில் $500 பில்லியன் தங்க வளங்களுடன், பாக்ஸைட், அலுமினியம், நிலக்கரி போன்ற பாதுகாப்பு, நுகர்வோர் பொருட்கள், சீனாவுடனான AI போட்டியை வெல்லத் தேவையான கனிமங்களும் மிகுந்துள்ளன" என்று விளக்கினார்.
வெனிசுலாவில் குவியும் அமெரிக்க நிறுவனங்கள்
கடந்த வெள்ளிக்கிழமை, பர்கம் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிகஸ் மற்றும் முன்பு அங்கு செயல்பட்ட 20க்கும் மேற்பட்ட அமெரிக்க சுரங்க நிறுவனப் பிரதிநிதிகளைச் சந்தித்தார். அப்போது, எண்ணெய், எரிவாயு நிர்வாகிகள் வெனிசுலாவுக்குத் திரும்பி அங்குள்ள பெரிய வாய்ப்புகளை ஆராய ஆர்வம் தெரிவித்தனர்.
அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதுகாப்பு
சந்திப்புக்குப் பிறகு, முதலீடு செய்யும் சுரங்க நிறுவனங்களுக்கு வெனிசுலா அரசு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தது. கனிம வளப் பகுதிகள் நீண்டகாலமாக மக்களுக்கான அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் அவையெல்லாம் சட்டவிரோத அமைப்புகள் என்று அமெரிக்கா கூறியிருந்தாது. இந்நிலையில் புதிய அரசு, அமெரிக்க நிறுவனங்களை பாதுகாக்கும் என்று உறுதியளித்திருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ இரண்டு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது வெனிசுலாவின் புதிய அரசு, தனது எண்ணெய் கட்டமைப்புகளை சீர்படுத்த தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications