"சென்னையில் மாபெரும் மோசடி!" அமெரிக்க வல்லுநர் பகீர் குற்றச்சாட்டு.. H-1B விசா விவகாரத்தில் பரபரப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் அரசு ஹெச்-1பி விசா திட்டத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே இதில் பெரிய மோசடி நடப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் அமெரிக்க எம்பி டேவ் பிராட், குறிப்பாகச் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் விசாக்கள் கையாளப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் ஹெச்-1பி விசா குறித்து இப்போது பெரிய விவாதமே நடந்து வருகிறது. ஹெச்-1பி விசா திட்டத்தில் மோசடி நடப்பதாக டிரம்ப் தரப்பு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இதனால் தான் அவர் சமீபத்தில் ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தைக் கூட உயர்த்திருந்தார். மேலும், பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்க வல்லுநர்
இதற்கிடையே அமெரிக்காவின் முன்னாள் எம்பியும் பொருளாதார வல்லுநரான டாக்டர் டேவ் பிராட் ஹெச்-1பி விசா திட்டம் தொடர்பாக சில பகீர் கருத்துகளைக் கூறியுள்ளார். H-1B விசா திட்டத்தில் பரவலான மோசடிகள் நடப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், சட்டப்படி நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட மொத்த விசாக்களின் எண்ணிக்கையை விட ஒரு குறிப்பிட்ட இந்திய நகரம் இருமடங்கு அதிக விசாக்களை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். அதிலும் அவர் சென்னையைக் குறிப்பிட்டுக் குற்றஞ்சாட்டினார்.
ஏற்கனவே டிரம்ப் நிர்வாகம் ஹெச்-1பி விசாவுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், பிராட்டின் இந்த குற்றச்சாட்டுகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அங்கு பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய பிராட், H-1B விசா அமைப்பு தொழில்முறை மோசடி என்ற அளவுக்குப் போய்விட்டதாகவும் இந்தியாவுக்குச் செல்லும் விசாக்களின் எண்ணிக்கை சட்டப்பூர்வ வரம்புகளை மீறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், "அமெரிக்காவுக்கு வரும் H-1B விசாக்களில் சுமார் 71% இந்தியாவிலிருந்து வருகின்றன. அதேநேரம் சீனாவிலிருந்து வெறும் 12% மட்டுமே. இதைப் பார்த்தாலே ஏதோ தவறு நடப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
சென்னையில் அதிக விசா
ஒட்டுமொத்தமாகவே ஒவ்வொரு ஆண்டும் 85,000 H-1B விசாக்கள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. ஆனால் ஏதோ ஒரு வகையில் இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட நகரம், அதாவது சென்னை மட்டும் 2.2 லட்சம் விசாக்களைப் பெற்றுள்ளது. இது அமெரிக்கா நிர்ணயித்த அதிகபட்ச வரம்பை விட 2.5 மடங்கு அதிகம். இதுதான் இந்த மோசடி.
இந்த விவகாரம் அமெரிக்க மக்களை நேரடியாகப் பாதிக்கிறது. இப்படி விசா வாங்கிவிட்டு அமெரிக்கா வருவோர் தங்களுக்கு அதிக திறனும் திறமையும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அது உண்மை இல்லை மோசடி! அவர்கள் அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலையை இவர்கள் பறித்துவிடுகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
4 மாநிலங்கள்
சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் 2024ல் சுமார் 2.2 லட்சம் H-1B விசாக்களையும், கூடுதலாக 1.4 லட்சம் H-4 சார்ந்த விசாக்களையும் பிராசஸ் செய்தது. தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு முக்கிய தென் மாநிலங்களுக்கான விண்ணப்பங்களை இந்தத் தூதரகம் தான் கையாள்கிறது. இதன் மூலம் அதிக உலகில் அதிக H-1B விசாக்களை பிராசஸ் செய்யும் மையமாக இது உருவெடுத்துள்ளது.
முன்னதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க வெளியுறவு சேவை அதிகாரி மஹ்வாஷ் சித்திக் என்பவரும் கிட்டத்தட்ட இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தூதரகத்தில் பணிபுரிந்தபோது பெரிய மோசடிகளை பார்த்தாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர், "2005- 2007 காலகட்டத்தில் நான் குறைந்தபட்சம் 51,000 விசாக்களை பரிசீலனை செய்தேன். அவற்றில் பெரும்பாலானவை H-1B விசாக்கள். அதில் 80-90% போலியானவை.
குற்றச்சாட்டு
குறிப்பாக ஹைதராபாத்தை ஒரு முக்கிய மையமாக இருந்தது. அங்குள்ள அமீர்பேட் என்ற பகுதியில் வெளிப்படையாக விசா விண்ணப்பதாரர்களுக்குப் பயிற்சி அளித்து, போலி வேலைவாய்ப்பு கடிதங்கள், கல்விச் சான்றிதழ்கள், அவ்வளவு ஏன் திருமண ஆவணங்களைக் கூட விற்றனர். இதற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தபோது எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பிடத்தக்க அரசியல் அழுத்தம் இருந்தது. நாங்கள் எடுத்த நடவடிக்கைகளைச் சட்டவிரோதமானது எனச் சொல்லிவிட்டனர். இந்தியாவில் மோசடியும், லஞ்சமும் சாதாரணமாகிவிட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications