மோடியின் இந்தியா ஒழிக.. அமெரிக்காவில் இந்து கோவில் அவமதிப்பு.. ஸ்பிரேயில் எழுதிய சர்ச்சை வாசகம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சினோ ஹில்ஸ் என்ற இடத்தில் பிஏபிஎஸ் எனும் சுவாமி நாராயண் கோவில் உள்ளது. இந்த கோவில் மீது சமூக விரோதிகள் பிரதமர் மோடி மற்றும் இந்துக்களுக்கு எதிரான வாசகங்களை ஸ்பிரேயில் எழுதிவைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சினோ ஹில்ஸ் என்ற இடம் உள்ளது. இங்கு போச்சசன்வாசி அக்ஷர் புருசோத்தம் ஸ்வாமி நாராயண் கோவில் உள்ளது. இந்த கோவில் சுருக்காக பிஏபிஎஸ் அல்லது சுவாமி நாராயண் கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் இருக்கும் பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று. இதனால் இந்த கோவில் அமெரிக்காவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு அமெரிக்கா வாழ் இந்து மக்கள் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் கோவில் சுவற்றில் கருப்பு ஸ்பிரே பெயிண்ட்டில் பிரதமர் மோடி, இந்துக்களுக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. ‛‛ மோடியின் இந்தியா ஒழிக'', ‛‛இந்துக்களே வெளியேறு'' என்றும் எழுதப்பட்டுள்ளது. இதனை பார்த்து பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி பிஏபிஎஸ் பொது விவகார பிரிவின் எக்ஸ் பக்கத்தில், ‛‛இந்த முறை கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸ் பகுதியில் உள்ள இந்து கோவில் அவமதிக்கப்பட்டுள்ளது. இந்து சமூகத்துக்கு எதிரான வெறுப்பு உறுதியாக உள்ளது என்பதை தான் இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது. சமூகத்தினருடன் சேர்ந்து சினோ ஹில்ஸ் மற்றும் தெற்கு கலிபோர்னியாவில் வெறுப்பை வேரூன்ற விடமாட்டோம். நமது பொதுவான மனிதநேயமும், நம்பிக்கையும், அமைதியும், இரக்கமும் எப்போது மேலோங்கி நிற்கும்'' என்றார்.
அதேபோல் அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்து விரோத சக்திகள், இந்துக்களுக்கு எதிரான பிரிவினைவாத கும்பலை ஒழிக்க அமெரிக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட அமெரிக்க இந்து கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
மேலும் அமெரிக்காவில் உள்ள இந்து கோவில்கள் இப்படி அவமதிப்பது என்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது கோவில்களை அவமதிப்பது என்பது அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த 2022ல் நியூயார்க்கில் ஒரு கோவில் அவமதிக்கப்பட்டது. 2023ல் சாக்ரமென்டோ மற்றும் கலிபோர்னியாவில் 2 கோவில்கள் அவமதிக்கப்பட்டன. இதுவே 2024ல் நியூயார்க்கில் உள்ள ஒரு கோவில், கலிபோர்னியாவில் உள்ள 5 கோவில்கள் என்று மொத்தம் 6 இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இப்போது மீண்டும் அதே கலிபோர்னியாவில் உள்ள மற்றொரு கோவில் குறி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கலிபோர்னியா சிவில் உரிமை துறையும் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டது. அதன்படி கலிபோர்னியாவில் யூத மத எதிர்ப்புக்கு பிறகு இந்து மத எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. அதன்படி அமெரிக்காவில் யூதர்களுக்கு எதிரான மத எதிர்ப்பு 37 சதவீதமும், இந்துக்களுக்கு எதிரான மத எதிர்ப்பு 23.3 சதவீதமும், முஸ்லிம் மத எதிர்ப்பு 14.6 சதவீதமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இவர் வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமின்றி இந்துக்களுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவேன். இந்து சமூகத்தின் சுதந்திரத்தை காப்பேன் என்று சூளுரைத்து இருந்தார். இருப்பினும் இப்போது இந்து கோவில் அவமதிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் அவமதிப்பு சம்பவம் இதுதான். இந்த விஷயத்தில் அவர் கூடுதல் கவனம் செலுத்துவார் என்று அமெரிக்க வாழ் இந்துக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொதுவாக அமெரிக்காவை எடுத்து கொண்டால் இந்து கோவில்கள் மீது நடக்கும் தாக்குதல் மற்றும் அவமதிப்புக்கு பின்னணியில் காலிஸ்தான் பயங்கரவாதிகளும் ஆதரவு அமைப்பினரும் தான் இருப்பார்கள். இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனிநாடு கோரி வருவது தான் இந்த காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு. இந்த அமைப்பு நம் நாட்டில் அழித்து ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனாலும், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் காலிஸ்தான் அமைப்பினர், மற்றும் அதன் ஆதரவாளர்கள் உள்ளனர். இவர்கள் தான் இந்து கோவில்களை அவமதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் சினோ ஹில்ஸ் சம்பவத்திலும் அவர்களுக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி அமெரிக்க போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications