இதுதான் "முதல் ஒளி!" 1.6 கோடி கிமீ தொலைவில் இருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்! ஒரே வியப்பு
வாஷிங்டன்: நாசா விண்வெளி சார்ந்து பல்வேறு ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் நிலையில், சுமார் 1.6 கோடி கிமீ தொலைவில் இருந்து இப்போது பூமிக்கு லேசர் லைட் வந்துள்ளது.
இந்த பிரபஞ்சம் என்பது பல்வேறு மர்மங்களைக் கொண்டதாகவே இருக்கிறது. அவற்றைக் கண்டறியவும் ஆய்வு செய்யவும் உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மற்றும் பிரபஞ்சம் குறித்த ஆய்வில் முன்னணியில் இருக்கிறது. இதற்கிடையே விண்வெளி ஆய்வில் நாசா இப்போது மகத்தான சாதனையைப் படைத்துள்ளது.
லேசர் லைட்: அதாவது சுமார் 1.6 கோடி கிமீ தொலைவில் இருந்து லேசர் ஒளி பூமிக்கு வந்தடைந்துள்ளது. 1.6 கோடி கிமீ என்பது பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட 40 மடங்கு அதிகமாகும். லேசர் ஒளி மூலம் மிக நீண்ட தூரத்திற்குத் தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியும் என்பதற்கு இது ஒரு சாட்சியாக இருக்கிறது.
தொலைதூரத்தில் இருக்கும் சிறுகோள் குறித்து ஆய்வு செய்ய நாசா சைக் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ள நிலையில், அதில் உள்ள டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் மூலம் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. கடந்த அக்.13ஆம் தேதி இந்த சைக் விண்கலம் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்டது. அந்த விண்கலம் 1.6 கோடி கிமீ தொலைவில் இருக்கும் நிலையில், முதல்முறையாக லேசர் கம்யூனிக்கேஷன் பெறப்பட்டுள்ளது.
முதல் ஒளி: கடந்த நவ. 14ஆம் தேதி சைக் விண்கலம் கலிபோர்னியாவில் உள்ள பாலோமர் ஆய்வகத்தில் அமைந்துள்ள ஹேல் டெலஸ்கோப்புடன் தொடர்பு இணைப்பை ஏற்படுத்தியது. சைக் விண்கலத்தில் இருந்து புறப்பட்ட லேசர் பூமியை வந்தடைய சுமார் 50 வினாடிகள் எடுத்தாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வு வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், இதை ஆய்வாளர்கள் 'முதல் ஒளி' 'first light' என்று அழைக்கிறார்கள்.
இது குறித்து நாசா ஆய்வாளர்கள் கூறுகையில், "சைக் விண்கலத்தில் உள்ள டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் வரும் காலத்தில் பல சாதனைகளைச் செய்யவுள்ள நிலையில், அதன் தொடக்கம் தான் இந்த முதல் ஒளி. லேசர் லைட்டை நாம் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தலாம் என்பதையே இது காட்டுகிறது. மனிதக் குலத்தை இந்த ஆய்வு நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை" என்றார்.
சைக் ஆய்வு: விண்வெளியில் சைக் என்ற சிறுகோள் உள்ளது.. அதை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டதே இந்த சைக் விண்கலமாகும். கிரகம் எப்படி உருவானது, அதன் மைய இயக்கவியல் என்ன என்பது குறித்துக் கண்டறிய இது உதவும். அந்த சிறுகோளை வரும் 2029இல் தான் இந்த விண்கலம் அடையும். அதன் பிறகு அங்கே இரண்டு ஆண்டுகள் வரை சோதனை நீடிக்கும். செல்லும் வழியில் பல இடங்களில் இருந்து இப்படி லேசர் சிக்னல்களை அனுப்பவும் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது, தொலைதூர விண்வெளி பயணங்களின் போது,ரேடியோ சிக்னல்கள் மூலம் தகவல் தொடர்பு நடைபெறுகிறது. இருப்பினும், ரேடியோ அலைவரிசை குறைவாக இருப்பதால், அதற்குப் பதிலாக லேசர் லைட்களை பயன்படுத்தி பூமிக்கும் விண்கலத்திற்கும் இடையே தகவல்களை அனுப்பும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது. இதன் மூலம் ரேடியோ சிக்னல்களை ஒப்பிடும் போது சுமார் 100 மடங்கு வேகமாகத் தகவல் தொடர்பு இருக்கும்.
இந்த ஆய்வு மட்டும் வெற்றிகரமாக முடிந்தால் இனி லேசர் மூலமாகவே தகவல் தொடர்பை நம்மால் மேற்கொள்ள முடியும். இதனால் வரும் காலங்களில் அதிநவீன கருவிகளையும் கூட விண்வெளிக்கு அனுப்பி நம்மால் சோதனைகளை மேற்கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications