ஹிண்டன்பர்க் கிளப்பிய அடுத்த புயல்.. ஒரே நாளில் 4,300 கோடியை இழந்த ட்விட்டர் நிறுவனர்.. அது எப்படி
வாஷிங்டன்: வாஷிங்டன்ச அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் நேற்றைய தினம் பிளாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக ரிப்போர்ட்டை வெளியிட்டது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தையே ஆட்டம் கண்டது.
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இப்போது பல பெரிய நிறுவனங்களும் கூட பல விதமான சிக்கல்களை எதிர்கொண்டே வருகின்றன. அமெரிக்காவின் மத்திய வங்கி வரி ஏற்றுவது இவர்களுக்குப் பெரிய சிக்கலாக மாறியுள்ளது.
இதனால் பல முக்கிய நிறுவனங்களும் கூட இந்த மோசமான நிதிய சூழலில் இருந்து தப்பிக்கவே பார்க்கிறது. இது ஒரு பக்கம் இருக்கும் சூழலில், அதேபோல ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிடும் ரிப்போர்ட்களும் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.

ஹிண்டன்பர்க்
அமெரிக்காவின் இந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அதானி குழுமம் குறித்த ரிப்போர்ட்டை வெளியிட்டிருந்தது. இதில் அதானி குழுமம் முறைகேடாகப் பங்குகள் விலையை அதிகரிப்பது, குடும்பத்தினரைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பதவி, வரி விவகாரம் தொடங்கி பல்வேறு புகார்கள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த ரிப்போர்ட் வெளியான பிறகு தான் அதானி நிறுவனத்தின் பங்குகள் விலை கணிசமாகக் குறைந்தது.

அதானி பங்குகள் விலை
அதானியின் பங்குகள் விலை மளமளவெனக் குறைந்தது. இதனால் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் புது பங்கு வெளியீட்டையும் கூட அதானி ரத்து செய்தது. மேலும், டாப் பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் அதானி பின்னுக்கு தள்ளப்பட்டார். இதற்கிடையே அதானிக்கு அடுத்து நேற்று மற்றொரு முக்கிய ரிப்போர்ட்டை வெளியிடப்போவதாக ஹண்டன்பெர்க் அறிவித்திருந்தது. முதலில் நிறுவனத்தின் பெயரை குறிப்பிடாமல் பெரிய நிறுவனம் ஒன்றின் ரிப்போர்ட்டை வெளியிடப் போவதாக மட்டும் அறிவித்திருந்தார்கள்.

பிளாக்
இதனால் பலரும் எந்த நிறுவனத்தின் பங்குகள் என்று தெரியாமலேயே இருந்தனர். மற்றொரு இந்திய நிறுவனமா, அல்லது அமெரிக்க நிறுவனமான என்றெல்லாம் குழப்பம் இருந்தது. இந்தச் சூழலில் தான் நேற்று பிளாக் நிறுவனத்தில் இருக்கும் முறைகேடுகளைப் பட்டியலிட்டு ஹிண்டன்பர்க் ரிப்போர்ட்டை வெளியிட்டது. ட்விட்டர் நிறுவனத்தைத் தோற்றுவித்த ஜாக் டோர்சி இந்த பிளாக் நிறுவனத்தையும் தொடங்கினார். இது பேமெண்ட் தொடர்பான ஒரு நிறுவனமாகும். ஹிண்டன்பர்க் அறிக்கை இதையும் ஒரு வழி செய்துவிட்டது.

மளமளவென சரிவு
மோசடியைப் புறக்கணித்தது உள்ளிட்ட காரணங்களை ஹிண்டன்பர்க் பட்டியலிட்டிருந்தது. ஹிண்டன்பர்க் ரிப்போர்ட் வெளியான பிறகு ஜாக் டோர்சியின் நிகர மதிப்பு கடுமையாகச் சரிந்தது. கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் டோர்சியின் சொத்து மதிப்பு $526 மில்லியன் சரிந்தது.. கடந்த மே மாதத்திற்குப் பிறகு ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு இந்தளவுக்குச் சரிவது இதுவே முதல்முறையாகும்.ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் ரிப்போர்ட் படி, சொத்து மதிப்பு 11% சரிந்துள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு $4.4 பில்லியனாக உள்ளது.

ஒரே நாளில் 22%
ஹிண்டன்பர்க் நேற்று பிளாக் குறித்த ரிப்போர்ட்டை வெளியிட்டிருந்தது. பிளாக் நிறுவனம் பயனர்கள் அளவீடுகளை உயர்த்தி காட்டியதாகக் கூறப்பட்டிருந்தது. ஃபண்டமென்ட்ல் குறைபாடுகள் காரணமாகவே பங்குகளின் விலை 65% முதல் 75% வரை குறையும் என்றும் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், பிளாக் நிறுவனம் வழக்கம் போல தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது. ஹிண்டன்பர்க் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. பிளாக் பங்குகள் ஒரே நாளில் 22% சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

டோர்சி
ட்விட்டரின் இணை நிறுவனரான டோர்சியின் தனது தனிப்பட்ட செல்வத்தின் பெரும்பகுதி பிளாக்கில் தான் உள்ளது. அந்தளவுக்கு அவர் இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார். பிளாக் நிறுவனத்தில் இருக்கும் டோர்சியின் பங்கு மதிப்பு 3 பில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. அதேநேரம் டிவிட்டரில் அவரது பங்குகளின் மதிப்பு $388 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஷார்ட் செல்லர்
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் என்பது ஒரு ஷார்ட் செல்லர் நிறுவனமாகும். அதாவது இவர்கள் குறிப்பிட்ட நிறுவனம் குறித்து ஆய்வு செய்வார்கள். அதில் முறைகேடுகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிவார்கள். பங்குகள் நிச்சயம் சரியும் என்று கண்டறிந்தால், அதற்கு எதிராகப் பங்குச்சந்தையில் நிலைப்பாட்டை எடுப்பார்கள். பின்னர் இவர்கள் வெளியிடும் விரிவான ரிப்போர்ட்டை தொடர்ந்து பங்குகள் சரியும், ஏற்கனவே இவர்கள் எதிரான ஒரு ஸ்டாண்ட்டை எடுத்திருப்பதால் அதில் நல்ல லாபமடைவார்கள்.

முதல்முறை இல்லை
நாதன் ஆண்டர்சனால் நடத்தப்படும் ஹிண்டன்பர்க் இதுபோல செய்வது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே அதானி அவர்கள் வெளியிட்ட ரிப்போர்ட் அந்த நிறுவனத்திற்குப் பெரிய தலைவலியாக மாறியது. இதனால் அவரது நிகர மதிப்பில் இருந்து பல லட்சம் டாலரை இழந்தது. ஒரு கட்டத்தில் உலகின் இரண்டாவது பணக்காரராக இருந்த அதானி இப்போது 21ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். அதேபோல இவர்கள் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிக்கோலா கார்ப் நிறுவனத்திற்கு எதிராகவும் ரிப்போர்ட்டை வெளியிட்டனர். இதையடுத்து நிகோலாவின் பங்கு சரிந்தது. மேலும், முறைகேடு உறுதியானதால், அதன் நிறுவனர் ட்ரெவர் மில்டனுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications