ஒர்க் ஃப்ரம் ஹோம் தெரியும்.. ஒர்க் ஃப்ரம் "நிலா" தெரியுமா! ரொம்ப சீக்கிரமே இதுவும் சாத்தியம்தாங்க
வாஷிங்டன்: நிலவு குறித்த ஆய்வுகளை நாசா மீண்டும் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்களை நாசா பகிர்ந்து உள்ளது.
அமெரிக்கா கடந்த 1969 ஜூலை மாதம் முதல்முறையாக மனிதர்களை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பியது. இது மனிதக் குல வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாகவே பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில் இப்போது சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே முயற்சியை நாசா எடுத்துள்ளது. இதற்கான முதற்கட்ட சோதனைகள் இப்போது நாசா தொடங்கி உள்ளது.

நாசா
இதற்காகத் தான் நாசா இப்போது ஆர்ட்டெமிஸ் என்ற திட்டத்தைத் தொடங்கி உள்ளது. மனிதர்களை 2024 அல்லது 2025இல் நிலவுக்கு அனுப்புவதே இந்த ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக முதற்கட்ட சோதனையாக ஆளில்லா ராக்கெட்டை அமெரிக்கா கடந்த வாரம் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பிச் சோதித்தது. ஏற்கனவே, எரிபொருள் கசிவு காரணமாக இரு முறை தள்ளி வைக்கப்பட்ட இந்தத் திட்டம் கடந்த வாரம் வெற்றிகரமாக நிறைவேறியது.

ஆர்ட்டெமிஸ்
ஆர்ட்டெமிஸ் ராக்கெட் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், இன்னும் 10 ஆண்டுகளில் மனிதர்கள் நிலவில் வாழும் சூழல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று நாசாவின் டாப் அதிகாரி ஹோவர்ட் ஹு தெரிவித்து உள்ளார். நாசாவின் ஓரியன் சந்திர விண்கலத் திட்டத்தின் தலைவரான ஹோவர்ட் ஹு இது தொடர்பாக மேலும் கூறுகையில், "2030ஆம் ஆண்டுக்கு முன்னரே கூட மனிதர்கள் நிலவில் செல்ல வாய்ப்பு உள்ளது. அதுவும் ஒரு சில நிமிடங்களாக இல்லாமல்... குறிப்பிடத் தகுந்த அளவுக்கு அங்கே இருக்க முடியும்.

தங்கி லேலை செய்ய முடியும்
நிலவின் மேற்பரப்பில் இருக்கும் சூழலைப் பொறுத்து இது அமையும். மனிதர்களின் வாழ்விடங்கள், வேலை செய்யத் தேவையான சூழல் ஆகியவற்றை கூட நிலவில் ஏற்படுத்திக் கொள்ள முடியும். நாங்கள் அனுப்பும் விண்வெளி வீரர்கள் நிலவில் அதிக காலம் இருப்பார்கள். அங்கேயே நிலவின் மேற்பரப்பில் வாழ்ந்து அவர்கள் அறிவியல் செய்யப் போகிறார்கள்," என்று அவர் கூறினார். புளோரிடாவில் உள்ள கேப் கனாவரலில் இருந்து கடந்த புதன்கிழமை ஆர்ட்டெமிஸ் 1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ஆர்ட்டெமிஸ் 1 ராக்கெ்டில் தான் ஓரியன் விண்கலம் இருந்தது. இந்த ராக்கெட்சோதனை தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் சூறாவளி உட்பட பல்வேறு காரணங்களால் தாமதமானது.

ஓரியன் கேப்ஸ்யூல்
இந்தச் சூழலில் தான் இப்போது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து உள்ளது. இது மனித விண்வெளிப் பயணத்திற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்று ஹோவர்ட் ஹு என்று தெரிவித்தார். இது வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், விரைவில் அடுத்த ராக்கெட்களை சோதனை செய்யும் முயற்சிகள் தொடங்கப்படும். ஓரியன் கேப்ஸ்யூல் வரும் டிசம்பர் 11இல் பூமிக்கு திரும்ப உள்ளது. வரும் காலத்தில் விண்வெளி வீரர்கள் நிலவிலேயே நீண்ட காலம் தங்கி ஆய்வு செய்யும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

லூனார் கேட்வே கட்டுமானம்
இதற்காக லூனார் கேட்வே என்ற அமைப்பை விண்வெளியில் கட்டி வருகின்றனர். எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் நிலவிலேயே வாழ இந்த லூனார் கேட்வே முக்கியமானதாகும். அதன் கட்டுமானமும் ஆர்ட்டெமிஸ் ராக்கெட்டின் பொறுப்பு தான். ஹோவர்ட் ஹு மேலும் கூறுகையில், "இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கும் விண்வெளி துறையில் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும். நாசாவிற்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.. நாங்கள் மீண்டும் நிலவுக்குச் செல்கிறோம். நாங்கள் ஒரு நிலையான திட்டத்தை நோக்கிச் செயல்படுகிறோம். நிலவிலேயே தங்கி பணியாற்றும் சூழல் மிக விரைவில் நிலவி ஏற்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஊக்குவிக்கும்
மனிதர்களைச் செவ்வாய்க் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் லட்சிய திட்டத்தின் தொடக்கமாகவே இது பார்க்கப்படுகிறது. நாசா வணிக மற்றும் சர்வதேச கூட்டு அமைப்புகளுடன் இணைந்து நிலவுக்குச் செல்லும்.. இந்த ஆய்வுகள் விண்வெளி குறித்து புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள உதவும். அடுத்த தலைமுறையையும் இது ஊக்குவிப்பதாக இருக்கும். நிலவில் இருந்து கிடைக்கும் படிமங்களை ஆய்வு செய்து, செவ்வாய்க்கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் கனவை நனவாக்க முடியும்.

தனியார் நிறுவனங்கள்
நாசா மட்டுமின்றி தனியார் அமைப்புகளும் கூட செவ்வாய்க்கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்வது தொடர்பாகத் தான் ஆய்வு செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸபேஸ் எக்ஸ் நிறுவனம் இது தொடர்பாகத் தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications