'கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா'.. போட்டியின் போது கிரவுண்டுக்குள் புகுந்து உணவு டெலிவரி செய்த நபர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் பேஸ்கட் பால் போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்து உணவு ஆர்டர் செய்த நபரை தேடிய டெலிவரி ஏஜெண்டால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதைப்பார்த்த ஆடியன்ஸ்கள் 'உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா' என புலம்பாத குறையாய் நடந்த நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
பேஸ்கட் பால் மைதானத்திற்குள் நுழைந்து உபேர் ஈட்ஸ் ஏஜெண்ட் ஒருவர் ஆர்டர் செய்தவரை தேடியதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தான் இந்த சுவாரசிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
உலகம் முழுவதும் இப்போது உணவு வினியோக சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

உணவு டெலிவரி
வீட்டில் இருந்தபடி நமக்கு பிடித்த உணவகங்களில் பிடித்த உணவுகளை வாங்கி சாப்பிட முடியும் வசதியை இந்த நிறுவனங்கள் அளிக்கின்றன. ஆர்டர் செய்த சில நிமிடங்களில் வீட்டு வாசலுக்கே சுடச்சுட உணவுகளை கொண்டு வந்து உணவு வினியோக சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் ஏஜெண்ட்டுகள் கையில் கொண்டு வந்து கொடுத்து விட்டு செல்கின்றனர். வெளிநாடுகளில் மட்டும் இன்றி இந்தியாவிலும் ஸ்விக்கி, சொமோட்டா போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவில் சம்பவம்
காலை முதல் இரவு வரை வாகனங்கள் இறக்கை கட்டி பறப்பது போல உணவு பொட்டலங்களுடன் இந்த நிறுவனங்களின் ஏஜெண்ட்கள் பறப்பதை முக்கிய நகரங்களில் அனைத்திலும் காண முடியும். வீட்டில் மட்டும் இன்றி எந்த இடத்தில் இருந்து ஆர்டர் போட்டாலும் வாடிக்கையாளர்களின் கைகளில் ஏஜெண்டுகள் கொண்டு வந்து கொடுப்பதை காண முடியும். இதில் வாடிக்கையாளர்களுக்கு சவுகரியங்கள் இருந்தாலும் சில நேரங்களில் அசவுகரியங்களும் இல்லாமல் இல்லை என்றும் சொல்லப்படுவதுண்டு. அதை நிரூபணம் செய்வது போலத்தான் அமெரிக்காவில் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

போட்டிக் களத்திற்குள் புகுந்து டெலிவரி
அமெரிக்காவின் அட்லாண்டிக் 10 என்ற பேஸ் கட்பால் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் லயோலா சிகாகோ மற்றும் Duquesne ஆகிய அணிகள் மோதின. போட்டி விறுவிறுப்பாக போய்க் கொண்டு இருந்த போது திடீரென போட்டிக் களத்திற்குள் உபேர் ஈட்ஸ் டெலிவரி ஏஜெண்ட் ஒருவர் புகுந்தார். சில நிமிடங்கள் போட்டிக் களத்திற்குள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டு இருந்தார். இதனால், ஆட்டம் சில நிமிடங்கள் தடைபட்டது.

நெட்டிசன்கள் கருத்து
இறுதியில் போட்டியின் ரெஃப்ரி ஆர்டர் செய்த உணவை கொடுக்கவே அந்த ஏஜெண்ட் போட்டிக் களத்திற்குள் புகுந்ததது தெரியவந்தது. இந்தக் காட்சிகளை பார்த்துக் கொண்டு இருந்த ரசிகர்கள் இங்கு என்னதான் நடக்குது? என குழப்ப மன நிலையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்ததை காண முடிந்தது. போட்டி வர்ணணையாளரும் இவ்விகாரம் குறித்து நகைச்சுவையாக கூறினார். நெட்டிசன்களும் இவ்விவகாரம் குறித்து தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள் உணவு டெலிவரி ஏஜெண்டின் கடமை உணர்ச்சி என பாராட்டி பதிவிட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்களோ போட்டியில் இருந்த பாதுகாப்பு குறித்தும் கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications