இந்தியாவுக்கு இனி ரஷ்யா வேண்டாம்.. எங்களிடம் தான் ராணுவ தளவாடங்களை வாங்கனும்.. அழுத்தும் அமெரிக்கா
வாஷிங்டன்: இந்தியாவுக்கு இனி ரஷ்யா வேண்டாம். ரஷ்யாவை இந்தியா கைவிட வேண்டும். அதற்கு பதிலாக அமெரிக்காவிடம் இருந்து ராணுவ தளவாடங்களை இந்தியா வாங்க வேண்டும் என்று அமெரிக்காவின் வர்த்தக துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் நம் நாட்டுக்கு பிரஷர் போட தொடங்கி உள்ளார்.
அமெரிக்க அதிபராக 2வது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். இவரை வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு வர்த்தகம், உறவு, எரிசக்தி துறை சார்ந்த விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அதோடு இந்தோ - பசிபிக் பிராந்திய பாதுகாப்பு பற்றியும் பேசப்பட்டது.

அதன்பிறகு டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த சமயத்தில் நம் நாட்டுக்கு பெரிய ஆஃபரை டொனால்ட் டிரம்ப் வழங்கினார். அதாவது இந்தியாவுக்கு எப் 35 ரக போர் விமானங்களை வழங்குவதாக அவர் கூறினார்.
அமெரிக்காவின் எஃப் 35 ரக போர் விமானம் என்பது 5 ம் தலைமுறை வகையை சேர்ந்தது. நம் நாட்டில் 5 ம் தலைமுறை விமானம் என்பது இல்லை. ரஃபேல் எனும் 4.5ம் தலைமுறை விமானம் தான் உள்ளது. ஆனால் நம்மை சீண்டும் சீனாவிடம் 5ம் தலைமுறை விமானம் உள்ளது. 6ம் தலைமுறை விமானத்தையும் சீனா கண்டுபிடித்து சோதனை செய்துள்ளது. இப்படியான சூழலில் தான் நம் நாட்டுக்கு அமெரிக்காவின் எஃப் 35 ரக போர் விமானத்தின் ஆஃபர் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி பிரதமர் மோடி உடனான பேச்சுவார்த்தையில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவிடம் இருந்து அதிகப்படியான ராணுவ தளவாடங்களை இந்தியா வாங்க வேண்டும். இது இருநாடுகள் இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்தும் என்பதோடு, இருநாடுகள் இடையேயான வர்த்தக பற்றாக்குறையை போக்கும் என்று கூறினார். அதாவது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனை ஒப்பிடும்போது அமெரிக்காவில் இருந்து குறைந்த அளவில் தான் நம்நாடு இறக்குமதி செய்கிறது. இதனை ஈடுசெய்ய அமெரிக்கா நினைக்கிறது.
அதாவது இந்தியா, அமெரிக்கா இடையே மிகப்பெரிய அளவில் வர்த்தகம் நடக்கிறது. கடந்த 2023-2024 நிதி ஆண்டில் மட்டும் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்து இருக்கிறது. இதில் அமெரிக்கா நமக்கு ஏற்றுமதி செய்ததை விட, நம் நாடு அமெரிக்காவுக்கு கூடுதலாக ரூ.2.76 லட்சம் கோடிக்கு பொருட்களை விற்று இருக்கிறது. இது அமெரிக்காவை உறுத்துகிறது. இந்த வர்த்தக பற்றாக்குறையை போக்க தான் ரஷ்யாவை கைவிட்டுவிட்டு, அமெரிக்காவிடம் இருந்து ராணுவ தளவாடங்களை வாங்க வேண்டும் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹோவார்ட் லுட்னிக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ‛இந்தியா டுடே' செய்தி நிறுவனம் சார்பில் நடந்த ‛2025 இந்தியா டூடே கான்கிளேவ்' நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹோவார்ட் லுட்னிக் பங்கேற்று பேசியதாவது: இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் ராணுவ தளவாட வர்த்தகத்தில் வரலாற்று ரீதியிலான உறவு உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து தான் இந்தியா அதிகமான ராணுவ தளவாடங்களை வாங்கி வருகிறது. இனி இந்தியாவுக்கு ரஷ்யா வேண்டாம். இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறோம். அதோடு ரஷ்யாவுக்கு மாற்றாக இந்தியாவுக்கு நவீன அமெரிக்கா பாதுகாப்பு துறை சார்ந்த தளவாடங்கள், ஆயுதங்களை வழங்க தயாராக இருக்கிறோம். இதன்மூலம் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு என்பது பலமானதாக இருக்கும்'' என்றார்.
கடந்த 2008 ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியா அமெரிக்காவிடம் இருந்து 20 பில்லியன் அமெரிக்கா டாலர் அளவுக்கு ராணுவ தளவாடங்களை வாங்கி உள்ளது. சமீபத்தில் கூட 6 P-8I கடல்சார் கண்காணிப்பு விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்க முடிவு செய்து அதற்கான ஒப்பந்தத்தையும் செய்தது. ஆனால் இந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவை விட ரஷ்யாவிடம் நம் நாடு அதிக தளவாடங்களை வாங்கி உள்ளது. இது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. இதனால் தான் ரஷ்யாவை கைவிட்டுவிட்டு இந்தியா அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்க வேண்டும் என்று தொடர்ந்து பிரஷர் போட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications