ரஷ்ய ஆயில் குறைத்து கொண்டு.. அமெரிக்காவிடம் அதிக ஆயில் வாங்கும் இந்தியா.. வர்த்தக டீல் பின்னணி!
டெல்லி: நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இப்போது இறுதியாகியுள்ளது. அதில் இந்தியாவுக்கான வரி 18%ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டு, அமெரிக்கா வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதில் சில கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. அது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
இந்தியா அமெரிக்கா இடையே சுமார் ஓராண்டாக மேலாக வர்த்தக மோதல் நிலவி வந்தது. கடந்த 6 மாதங்களாக அமெரிக்காவின் கூடுதல் வரியையும் இந்தியா எதிர்கொண்டது. இதனால் இந்திய வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்தச் சூழலில் தான் இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக டீல் இறுதியானதாக நேற்று அறிவிப்பு வெளியானது.

இந்தியா அமெரிக்க வர்த்தக டீல்
அமெரிக்க இந்திய உறவில் இது ஒரு திருப்புமுனையாகக் பார்க்கப்படுகிறது. இதில் இரண்டு விஷயங்களை டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார். முதல் விஷயம் வரி தொடர்பானது. இந்தியாவின் வரி 18%ஆக குறையும் என டிரம்ப் அறிவித்தார். அதற்கு பதிலாக அமெரிக்கா பொருட்களுக்கான வரியை படிப்படியாக ஜீரோவாக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், வர்த்தக தடைகளை நீக்கவும் உறுதியளித்து இருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியப் பொருட்களுக்கான பரஸ்பர வரிகளை அமெரிக்கா 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைத்துள்ளது. கூடுதலாக, ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்திய இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத கூடுதல் வரிகளையும் அமெரிக்கா நீக்கியுள்ளது. அதாவது இந்தியா மீதான இறக்குமதி வரி 50%ல் இருந்து 18%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய்
அடுத்த அறிவிப்பு கச்சா எண்ணெய் தொடர்பானது. ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருவதே இரு நாட்டு உறவுகள் பாதிக்கப்பட காரணமாக இருந்தது.இதுவே இந்த வர்த்தக மோதலின் முக்கியப் பிரச்சனையாக இருந்தது. இந்தச் சூழலில் தான் 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் நேற்று அறிவிப்பை வெளியிட்டார்.
அதாவது ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும் பிரதமர் மோடியுடன் ஆலோசித்ததாக குறிப்பிட்டார். மேலும், ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதை நிறுத்திவிட்டு, அமெரிக்காவிடம் இருந்தும், வெனிசுலாவிடம் இருந்தும் அதிக அளவில் வாங்கப் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார் என்றும் டிரம்ப் தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார். இது உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவும் என்றார்.
ரஷ்ய கச்சா எண்ணெய்
டிரம்ப் அறிவிப்பின்படி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டு, அமெரிக்கா வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. ஏற்கனவே, கடந்த சில மாதங்களாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை இந்தியா குறைத்துக் கொண்டு இருந்தது. டிரம்ப் அறிவித்தது அப்படியே நடந்தால் அமெரிக்காவிடம் இருந்தும், வெனிசுலாவிடம் இருந்தும் கச்சா எண்ணெய் வாங்குவது அதிகரிக்கும்!












Click it and Unblock the Notifications