அமெரிக்க ஆசை.. குழந்தையை தொலைத்த இந்தியர்கள்! எப்போது முடியும் இந்த துயரம்!
வாஷிங்டன்: கடல் வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் 2 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவுக்குள் தொடர்ந்து சட்டவிரோதமாக நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இப்படி வருபவர்கள் திரும்பவும் நாடு கடத்தப்படுகிறார்கள். ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் குறைவதாக தெரியவில்லை.

அதேபோன்ற சம்பவம் நேற்று நடந்திருக்கிறது. அதாவது கலிபோர்னியாவின் சான் டியாகோ பகுதியில் உள்ள டோரோ ஸ்பைன்ஸ் ஸ்டேட் கடற்கரையில் அமெரிக்க கடலோர காவல் படையினர் சிறிய ரக படகை கண்டுபிடித்துள்ளனர். இந்த படகின் மூலம் இந்தியர்கள் அமெரிக்காவில் நுழைய முயன்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. மொத்தம் 2 குழந்தைகள் உட்பட 16 பேர் இதில் பயணித்து வந்திருக்கின்றனர். படகு மெக்சிகோவிலிருந்து வந்திருக்கிறது.
கரையை நெருங்கும்போது அலை ஓவராகி கவிழ்ந்திருக்கிறது. படகில் பயணித்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல, 7 பேரை காணவில்லை. காணாமல் போனவர்களில் 2 குழந்தைகளும் அடங்கும். இந்த சம்பவத்தையடுத்து இந்திய வெளியுறவுத்துறை பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவி வருகிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அமெரிக்க போலீசார், கடத்தல் சம்பவத்தில் இந்தியர்கள் ஈடுபட்டார்களா என்கிற கோணத்திலும் விசாரணையை தொடங்கியுள்ளனர். காரணம் இதுபோன்ற சிறிய ரக படகுகள் பெரும்பாலும் கடத்தல் சம்பவத்திற்குதான் அதிகம் பயன்படும். படகிலிருந்து 18 லைஃப் ஜாக்கெட்டுகள், காலியான மொபைல் பேக், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.
அமெரிக்க மோகம் இந்தியர்களிடையே அதிகம். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை சுமார் 90,415 இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 2021ம் ஆண்டு வெளியான தகவல்களின்படி 7 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
கடந்த ஆண்டு இப்படி சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டு, போர் கைதிகளை போல கைகளிலும், கால்களிலும் விலங்கு போடப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இருப்பினும் கூட, இந்தியர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி மேற்கொள்பவர்கள் இது போன்று விபத்தில் சிக்குவது அடிக்கடி நடக்கும் சம்பவம்தான்.
கடந்த ஆண்டு இதேபோல இந்திய குடும்பம் ஒன்று மெக்சிகோ வழியாக வட அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றது. ரியோ கிராண்டே நதியை இவர்கள் கடக்கும்போது வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்கள். இதில் தாயும் இரண்டு குழந்தைகளும் நீரில் அடித்து செல்லப்பட்டார்கள். மற்றவர்கள் காப்பாற்றப்பட்டாலும், இந்த மூன்று பேரை காப்பாற்ற முடியவில்லை. மூவரும் சடலமாக மீட்கப்பட்டார்கள்.
இவ்வளவு ஆபத்துகள் இருப்பதால் சட்டவிரோதமான வழிகளை இந்தியர்கள் பயன்படுத்த வேண்டாம் என்று தொடர்ந்து எச்சரிக்கைகள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றனர். இந்தியர்கள் விழித்துக்கொள்வார்களா?












Click it and Unblock the Notifications