டிரம்பால் இந்தியர்களிடம் இருந்து பறிக்கப்படும் கிரீன் கார்டுகள்! அதிகரிக்கும் பதற்றம்! 5 பாயிண்டுகள்
வாஷிங்டன்: டிரம்ப் வருகைக்குப் பிறகு அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருப்போரிடையேயும் கூட கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களில் அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருப்போருக்கு எதிராக நடந்த நடவடிக்கைகள் என்ன! இதனால் அங்குள்ள இந்தியர்கள் அஞ்சுவது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
டிரம்ப் அதிபரான பிறகு அவர் முதலில் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க நடவடிக்கை எடுத்தார். அடுத்து இப்போது அவரது ஆட்சியில் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் நுழைந்தோருக்கும் கூட சிக்கல் ஏற்பட்டுவிடும் போல.. அதிலும் குறிப்பாக கிரீன் கார்டு வைத்திருப்போருக்கு.! இது குறித்து நாம் 5 மேஜர் பாயிண்டுகளை பார்க்கலாம்.

சம்பவம் 1
சமீபத்தில் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பிய ஒருவரிடம் அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகள் மிக மோசமாக விசாரித்துள்ளனர். அதாவது ஃபேபியன் ஷ்மிட்டின் என்ற நபர் கடந்த 2023ம் ஆண்டு கிரீன் கார்டு பெற்றுள்ளார். அவர் சொந்த நாட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது மாசசூசெட்ஸில் உள்ள லோகன் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவரை அதிகாரிகள் நிர்வாணமாக்கி சோதனை செய்துள்ளனர். மிக மோசமாக அவரை நடத்திய அதிகாரிகள் அவருக்கு மருந்துகளைக் கூட கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஒரு கிரிமினலை விசாரிப்பது போல தன் மகனிடம் அதிகாரிகள் நடந்து கொண்டதாகவும் மிக மோசமாக நடத்தியதாகவும் ஃபேபியனின் தாயார் கூறுகிறார். அதேநேரம் இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்கா எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. அதேநேரம் ஃபேபியன் இன்னுமே தடுப்பு காவலில் தான் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் அடுத்தகட்ட விசாரணை நடந்து வருகிறது.
சம்பவம் 2
அதேபோல அமெரிக்க விமான நிலையங்களில் வயதான இந்தியர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் வயதான தம்பதிகள், அவர்கள் கிரீன் கார்டு வைத்திருந்தாலும் மீண்டும் மீண்டும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நீண்ட நாள் இந்தியாவில் இருந்துவிட்டு அமெரிக்கா செல்வோரிடம், கிரீன் கார்டுகளை சரண்டர் செய்யச் சொல்லி அழுத்தம் தரப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதுபோல அமெரிக்க விமான நிலையங்களில் வயதான இந்திய தம்பதிகள் குறிவைக்கப்படுவது கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

அமெரிக்காவில் பொதுவாகக் குளிர்காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் வயதான இந்தியர்கள் அந்த காலகட்டத்தில் இந்தியா திரும்பிவிடுவார்கள். குளிர்காலம் முடிந்தவுடன் அமெரிக்கா செல்வார்கள். அதுபோல அமெரிக்கா செல்வோரை Form I-407இல் கையெழுத்துப் போட்ட சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்களாம். ஒருவர் தானாக கிரீன் கார்டை வாபஸ் அளிக்கும்போது மட்டுமே Form I-407ஐ திரும்பத் தர வேண்டும். ஆனால் அதில் கையெழுத்துப் போடச் சொல்லி அதிகாரிகளே அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.
காரணம் டிரம்ப்
எப்போதும் அமெரிக்கா மற்றும் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற பாலிசியை வைத்திருப்பவர் டிரம்ப். சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் டிரம்ப், சட்டப்பூர்வ குடியேற்றத்தையும் கட்டுப்படுத்த விரும்புகிறார். அவர் கடந்த முறை அமெரிக்க அதிபராகத் தேர்வான சமயத்திலேயே கிரீன் கார்டு பெறும் விதிகளைக் கடுமையாக்க முயன்றார். வெளிநாட்டினர் கிரீன் கார்டு வாங்குவதைக் கடினமாக்கினார்.
இந்தாண்டு அவரது செயல்கள் ஏற்கனவே கிரீன் கார்டு வைத்திருப்போருக்கும் எதிராக அமைகிறது. கிரீன் கார்டு வைத்திருப்போர் கடந்த காலங்களில் சிறு கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்தாலும், அதைத் தோண்டி எடுத்து வருகிறார்கள். அதையே ஒரு காரணமாகச் சொல்லி கிரீன் கார்டு ரத்து செய்வதே அவர்களிடம் திட்டம் எனக் கூறப்படுகிறது.

கிரீன் கார்டு சிக்கல்கள்
கிரீன் கார்டு என்பது ஒருவர் நிரந்தரமாக அமெரிக்காவில் தங்கி வேலை செய்யும் உரிமையைத் தருகிறது. அதேநேரம் அதில் சில நிபந்தனைகள் இருக்கும். அதை நிச்சயம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக கிரீன் கார்டு வைத்திருப்போர் 6 மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் இருந்தால் அவர்கள் அமெரிக்கா திரும்பும் போது சிக்கலை எதிர்கொள்ளலாம். உரிய அனுமதி இல்லாமல் ஓராண்டிற்கு மேல் வெளிநாட்டில் தங்கியிருந்தால் கிரீன் கார்டு தானாகவே ரத்தாகும். அங்கு பலரும் கோட்டைவிடுவது இந்த இடத்தில் தானாம். நீண்ட காலம் தாயகத்தில் இருந்துவிட்டு திரும்பும்போது பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார்கள்.
அதேபோல கிரீன் கார்டு வைத்திருப்போர் எந்தவொரு தீவிரவாத செயல்கள், தேச பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. மேலும், குடியேற்ற விதிகளைப் பின்பற்றாமல் இருப்பது உள்ளிட்ட செயல்களை செய்தாலும் கிரீன் கார்டு ரத்தாகும். அதாவது பெரிய குற்றங்கள் செய்தால் மட்டுமே கிரீன் கார்டு ரத்து செய்யப்படும். ஆனால், இது குறித்துத் தெளிவான விதி இல்லாததால் சிறு தவறுகளுக்கும் கூட தங்களின் கிரீன் கார்டு ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
அச்சத்தில் இந்தியர்கள்
டிரம்ப் வருகைக்கு முன்பே கூட உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் கிரீன் கார்டுகள் ரத்து செய்யும் ஆப்ஷன் இருந்தது. ஆனால், அவை அரிதாகவே நடக்கும். மேலும், நீதிபதி முன்பு ஆஜராகி வாதாடவும் வாய்ப்பு இருந்தது. ஆனால், டிரம்பால் குடியேற்ற அதிகாரிகள் வசம் பவர் அதிகரித்துள்ளது. அவர்கள் இதேபோல தீவிர ஆய்வை தொடர்ந்தால், கிரீன் கார்டு வைத்திருப்போரே கூட நாடு கடத்தப்படலாம்.
அமெரிக்காவில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிரீன் கார்டு வைத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் சூழலில், டிரம்ப் அரசு நடவடிக்கையால் இந்தியர்கள் நாடு கடத்தப்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதற்கு முன்பு வரை கிரீன் கார்டு வைத்திருந்தால் அமெரிக்காவில் நிம்மதியாக இருக்கலாம் என மக்கள் நினைத்த சூழலில், அது மாறி வருகிறது.












Click it and Unblock the Notifications