அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்காவில் போலியாகக் குடியுரிமை பெற்றவர்களுக்கு எதிரான நடவடிக்கை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே மோசடியான முறையில் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றதாகக் கூறி இந்தியத் தொழிலதிபர் ஒருவரின் குடியுரிமை பறிக்கப்படுகிறது. இது அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, வெளிநாட்டினருக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடு கடத்துவது, சட்டப்பூர்வமாகக் குடியேறுவோருக்குக் கட்டுப்பாடுகள் எனப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இப்போது டிரம்ப் அரசு, குடியுரிமை பெற்றவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியத் தொழிலதிபர்
அதன்படி அமெரிக்க நீதித்துறை எடுத்துள்ள நடவடிக்கையில் இந்தியத் தொழிலதிபரும் சிக்கியுள்ளார். மொத்தம் 17 பேருக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை இந்தச் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. குடியுரிமை பெறும் செயல்முறையின்போது மோசடி, தகவல்களை மறைத்தல் மற்றும் தவறான வாக்குமூலங்களை அளித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்த 17 பேர் கொண்ட பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார் என்பதே பேசுபொருளாகியுள்ளது..
அமெரிக்க நீதித்துறை ஜூன் 8ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த நடவடிக்கையானது தீவிரக் குற்றங்கள் புரிந்த நபர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை பாலியல் துஷ்பிரயோகம், போதைப்பொருள் கடத்தல், நிதி மோசடி மற்றும் குடியேற்ற நடைமுறைகளில் முறைகேடு செய்தவர்கள் மீது இந்த நடவடிக்கை பாய்கிறது. அமெரிக்க வரலாற்றிலேயே குடியுரிமை நீக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. குடியுரிமை பெறும்போது வழங்கப்பட்ட தவறான தகவல்களே இந்த சட்ட நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகும்.
நீரஜ் சர்மா யார்?
அமெரிக்க அரசு நியூ ஜெர்சியை சேர்ந்த மேக்னாவிக்ஷன் எல்எல்சி என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ நீரஜ் சர்மா (50) என்பவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், தனது குடியுரிமை விண்ணப்பத்தில் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீர்ஜ் சர்மா மீது அமெரிக்க நீதித்துறை பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளது.
என்ன புகார்
நீர்ஜ் சர்மா மீது அமெரிக்க நீதித்துறை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் கடுமையானவை. குறிப்பாக, அவர் 11 போலி எச்-1பி (H-1B) விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு ஊழியர்களை ஒரு முக்கிய சர்வதேச நிதி நிறுவனத்தில் பணியமர்த்துவதாக அவர் தவறான வாக்குறுதி அளித்ததாகவும், தனது நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் கையொப்பங்களைப் போலியாக உருவாக்கியது மற்றும் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகவும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் உள்ளன.
மேலும், 2017ம் ஆண்டில் நீரஜ் சர்மா அமெரிக்கக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோது, தான் எந்தவொரு குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும் சட்ட விரோதமாக எந்தவொரு செயலும் செய்யவில்லை என்றும் அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, டிசம்பர் 2017-ல் அவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.
நடவடிக்கை
எனினும், 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் விசா மோசடி தொடர்பான வழக்கில் அவர் தண்டனை பெற்றார். தனது குற்றச் செயல்களை வேண்டுமென்றே மறைத்து, ஏமாற்றி குடியுரிமை பெற்றதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்பதே நீதித்துறையின் தற்போதைய கோரிக்கையாகும்.
நீரஜ் சர்மாவின் வழக்கு, அமெரிக்க அரசு குடியுரிமை பெற்றவர்களுக்கு எதிராக எடுத்துள்ள ஒரு பெரிய நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். குடியுரிமை பெறுவதற்கான சட்டப்பூர்வமான நடைமுறைகளை முறைகேடாகப் பயன்படுத்தியவர்களுக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..


Click it and Unblock the Notifications
