டிரம்பால் வந்த குழப்பம்.. திடீரென அமெரிக்க விமானத்தில் இருந்து இறங்கிய இந்தியர்கள்! என்ன நடந்தது?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விசா கட்டணத்தைத் திடீரென உயர்த்தியதால் அங்கு மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டது. குறிப்பாக விமானத்தில் இந்தியாவுக்கு வர இருந்த பயணிகள் பலரும் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் விமானத்தில் இருந்து இறங்கிவிட்டனர். அப்போது இந்தியப் பயணிகள் பெரும் குழப்பத்தில் இருந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் திடீரென ஹெச்-1பி விசா கட்டணத்தை அதிரடியாக உயர்த்தினார். 4,500 டாலரில் (ரூ.3.7 லட்சம்) இருந்து 100,000 டாலராக ஹெச்-1பி விசா கட்டணம் உயர்த்தப்பட்டது. அதாவது ஒரே நேரத்தில் 2,122% உயர்த்தப்பட்டது. அமெரிக்காவின் இந்தக் கட்டண உயர்வு இந்தியர்களையே அதிகம் பாதிப்பதாக இருக்கிறது.

குழப்பம்
அதிலும் முதலில் இந்த அறிவிப்பு வெளியானபோது, ஹெச்-1பி விசா வைத்திருப்போர் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒரு லட்சம் டாலரை செலுத்த வேண்டும் என்பது போலச் சொல்லப்பட்டது. இதனால் ஏற்கனவே ஹெச்-1பி விசா வைத்திருப்போரும் கூட பதறிப் போனார்கள். அதன் பிறகு சில மணி நேரம் கழித்து வெள்ளை மாளிகை இது தொடர்பாக விளக்கம் கொடுத்தது. புதிதாக ஹெச்-1பி விசா கோரி விண்ணப்பிப்போருக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் ஏற்கனவே விசா வைத்திருப்போர் இந்தக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை என விளக்கம் தரப்பட்டது.
ஆனால், இந்த இடைப்பட்ட நேரத்தில் அமெரிக்காவில் இருந்த இந்தியர்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டது. குறிப்பாக அமெரிக்காவில் இருந்து இந்தியா வரத் திட்டமிட்டிருந்தோர் தங்கள் பிளான்களையே ரத்து செய்தனர். இதற்கிடையே இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. அதாவது அப்போது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு ஒரு விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
இந்தியர்கள் அச்சம்
அப்போது தான் இந்த விசா கட்டணம் தொடர்பான அறிவிப்பு வந்தது. இதனால் இந்தியாவுக்குச் சென்றால் மீண்டும் அமெரிக்காவுக்கு வர முடியாதோ என அஞ்சி, இந்தியப் பயணிகள் பலர் விமானத்தில் இருந்து இறங்கினர். இதனால் விமானம் சுமார் மூன்று மணிநேரத் தாமதமாகவே புறப்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அதில் ஒரு வீடியோவில், பயணிகள் பலரும் பதற்றத்துடன் இருக்கை அருகே நின்றுகொண்டிருக்க, மற்றவர்கள் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தனர். விமானம் முழுக்க குழப்பம் இருப்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இன்னொரு வீடியோவில் விமானியே இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறார். அதாவது அவர், "சில குழப்பமான சூழல் நிலவுவதால் பயணிகள் பலரும் இந்த விமானத்தில் பயணிக்க விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் சூழல் எங்களுக்கும் புரிகிறது. இதனால் விரும்பும் பயணிகள் விமானத்திலிருந்து இறங்கலாம்" என்று பைலட்டே சொல்வதைக் கேட்க முடிந்தது.
இறங்கிய இந்தியர்கள்
இந்த வீடியோவை பகிர்ந்த இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒருவர், இந்தியப் பயணிகளிடையே ஏற்பட்ட பீதியையும், நிலவிய குழப்பத்தையும் விவரித்தார். இது தொடர்பாக அவர், "சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டில் எமிரேட்ஸ் விமானத்தில் ஒரு குழப்பமான சூழல் இருந்தது. விசா தொடர்பான புதிய உத்தரவு பலரிடையே, குறிப்பாக இந்தியப் பயணிகளிடையே, பீதியை உருவாக்கியது. பலர் விமானத்தை விட்டு இறங்க முடிவு செய்தனர். இதனால் விமானம் சுமார் 3 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது" என்றார்.
டிரம்ப் சொல்வது என்ன
ஹெச்-1பி விசா கட்டண உயர்வை அறிவித்துள்ள டிரம்ப் அதற்கான காரணத்தையும் விளக்கினார். அது தொடர்பாக அவர், "அதிகத் திறன் கொண்ட வேலைகளைச் செய்யத் தலைசிறந்த ஊழியர்களை அமெரிக்காவுக்குக் கொண்டு வரவே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், இப்போது அமெரிக்கர்களுக்கு வேலை தராமல் குறைந்த ஊதியத்தில்.. குறைந்த திறன் கொண்ட வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள். அதைத் தடுக்கவே கட்டணத்தை உயர்த்துகிறோம்" என்றார்.
டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கையால் அங்குக் குழப்பம் நிலவும் சூழலில், மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் தங்கள் H-1B விசா ஊழியர்கள் குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என்று வலியுறுத்தின. மேலும், இப்போது அமெரிக்காவுக்கு வெளியே இருப்போரும் 24 மணி நேரத்திற்குள் அமெரிக்கா திரும்பவும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications