மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக்
வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறிய பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்கும் செயல் ஒன்றை ஈரான் செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை அனுமதிக்க முடியாது என்று ஹார்மூஸ் ஜலசந்தியில் இருந்து திருப்பி விட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் கொண்டு வர மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில், ஈரான் பாகிஸ்தானுக்கு நேற்று அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளது.

கப்பலை திரும்பிவிட்ட ஈரான்
ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுக்குள் வைத்து இருக்கும் ஈரான், முன் அனுமதி பெற்ற கப்பல்களை மட்டுமே அனுமதித்து வருகிறது. இதனால், ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முடியாமல் ஆயிரக்கணக்கான கப்பல்கள் நடுவழியில் நிற்கின்றன. உலக எண்ணெய் வர்த்தகத்தின் உயிர் நாடியாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறுகிறது.
அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியிருக்கும் ஈரான் நேற்று, பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த கப்பலை அனுமதிக்க மறுத்து திருப்பிவிட்டுள்ளது. இது தொடர்பாக ஈரான் புரட்சிகர ராணுவத்தின் கடற்படை தளபதி எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- கராச்சி நோக்கி சென்று கொண்டிருந்த 'SELEN' என்ற கப்பலை திரும்பி செல்லுமாறு ஈரான் கடற்படை உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்புக்கான அனுமதி பெறவில்லை என்பதால் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியில்லை என்று திருப்பி அனுப்பியுள்ளது ஈரான். இது தொடர்பாக ஐஆர்ஜிசி (IRGC) கடற்படை தளபதி ரியர் அட்மிரல் அலிரேசா தங்க்ஸிரி கூறுகையில், "சட்ட நடைமுறைகளை பின்பற்றாததும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல தேவையான அனுமதி இல்லாததாலும், 'செலென்' (SELEN) என்ற சரக்கு கப்பல் ஐஆர்ஜிசி கடற்படையால் திருப்பி அனுப்பப்பட்டது.
ஈரான் அனுமதி பெறுவது அவசியம்
இந்த ஜலசந்தி வழியாக எந்தக் கப்பல் செல்ல வேண்டுமானாலும், ஈரானின் கடல் அதிகாரிகளுடன் முழுமையான ஒருங்கிணைப்பு அவசியம். மேலும், இந்த நடவடிக்கை ஈரான் மக்களின் முழு ஆதரவில்லாமல் சாத்தியமாகாது" என்று தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியின்றி ஈரானால் திருப்பிவிடப்பட்ட செலன் கப்பல், கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் நாட்டு கொடியுடன் வந்தது.
இந்த சரக்கு கப்பல் பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சி நோக்கி பயணித்து கொண்டிருந்தது. பாகிஸ்தானில் சரக்குகளை இறக்குவதற்காக சென்று கொண்டிருந்த அந்த கப்பல், தற்போது திருப்பிவிடப்பட்டதால், பாரசீக வளைகுடா பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதை கப்பல் டிராக்கர் ஆன்லைன் தரவுகள் காட்டுகின்றன.
பாகிஸ்தான் பிரதமர் ட்வீட் பதிவு
ஈரான் - அமெரிக்கா போர் வெடித்ததும், ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் எடுத்த ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவித்தது. பிற கப்பல்கள் ஈரான் அரசு மற்றும் ஈரான் புரட்சிகர ராணுவத்திடம் அனுமதி பெற்று இருந்தால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளது.
முன்னதாக ஈரான் - அமெரிக்கா இடையே நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கூறியிருந்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் தளத்தில் இந்த தகவலை பதிவிட்டு இருந்தார். ஷெபாஸ் ஷெரிப் வெளியிட்டு இருந்த பதிவில், "மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போருக்கு முடிவு காண பேச்சுவார்த்தையை முன்னெடுக்கப்படும் முயற்சிகளை பாகிஸ்தான் வரவேற்பதோடு முழுமையாக ஆதரிக்கிறது.
மத்தியஸ்தம் செய்ய நினைத்து "பல்பு"
இது பிராந்தியத்திலும் அதற்கு அப்பாற்பட்ட பகுதிகளிலும் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு உதவும். அமெரிக்கா மற்றும் ஈரான் இருவரின் ஒப்புதலுக்கு உட்பட்டதாக, இந்த மோதலுக்கு முழுமையான தீர்வு காண அர்த்தமுள்ள மற்றும் தீர்மானமான பேச்சுவார்த்தைகளை நடத்த ஏற்பாடு செய்யவும் பாகிஸ்தான் தயாராக உள்ளது" என்று கூறியிருந்தார்.
ஆனால் இது தொடர்பாக அமெரிக்கா தற்போது வரை எதுவும் கருத்து தெரிவிக்காத நிலையில், ஈரானும் பாகிஸ்தான் கப்பலை திருப்பி விட்டு சம்பவம் செய்துள்ளது. மத்தியஸ்தம் செய்ய தயார் என்று வாண்ட்டடாக வண்டியில் ஏறிய பாகிஸ்தானுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காதது ஷெபாஸ் ஷெரீப்புக்கு பெரும் அதிர்ச்சியாகவே அமைந்து இருப்பதாக சர்வதேச நோக்கர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications