அடுத்த திட்டத்திற்கு ரெடியான அமெரிக்கா! இந்திய ஐடி துறைக்கு ஆபத்து.. டிரம்ப் போடும் மோசமான பிளான்!
வாஷிங்டன்: டிரம்ப் போட்ட 50% வரி காரணமாக இந்திய ஜவுளி துறை கடும் நெருக்கடியை சந்தித்திருக்கிறது. இந்நிலையில், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் மீது வரிகளை விதிக்க டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா விதித்த 50% வரி பொருட்களுக்கானவை. அதாவது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் ஜவுளி, ஆபரணங்கள், இறால், தோல் பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்களுக்கு இந்த வரி பொருந்தும். ஆனால் சேவை துறைக்கு இது பொருந்தாது.

இந்நிலையில் சேவை துறைக்கும் வரி விதிக்க டிரம்ப் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி செய்தால் தகவல் தொழில்நுட்ப சேவைகள், வெளிநாட்டுத் தொலைதூரப் பணியாளர்கள் மற்றும் அவுட்சோர்ஸ் வணிகச் செயல்முறைகள் கடுமையான பாதிக்கப்படும். சமீபத்தில் x தளத்தில், டிரம்பின் குடியரசு கட்சியின் செற்பாட்டாளரான 'ஜாக் போசோபியெக்' ஒரு பதிவை எழுதியிருந்தார். இதனையடுத்துதான் சேவை துறைக்கு வரி என்கிற விவாதங்கள் எழுந்திருக்கின்றன.
"அனைத்து அவுட்சோர்சிங்கிற்கும் வரி விதிக்கப்பட வேண்டும். அமெரிக்காவிற்கு தொலைதூரத்தில் சேவைகளை வழங்குவதற்கான சலுகைக்கு, பொருட்கள் போலவே பணம் செலுத்த வேண்டும். தொழில்கள் முழுவதும், தேவைப்படும் பட்சத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப வரிகள் விதிக்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு அமெரிக்காவின் வர்த்தகம் மற்றும் உற்பத்தித் துறையின் மூத்த ஆலோசகர் பீட்டர் நவரோவால் ரீ-ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து பேசும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள், அமெரிக்கா தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் செயலில் ஈடுபட்டிருக்கிறது என்று விமர்சித்திருக்கின்றனர். அதாவது குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைக்கிறார்கள் என்றுதான் இந்தியாவின் உழைப்பு சந்தையை, அதாவது இந்தியாவில் இருக்கும் ஐடி தொழிலாளர்களை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அப்படி இருக்கையில் அதற்கும் வரி போட்டால், நிலைமை மோசமாகும்.
மீண்டும் அமெரிக்க மக்களுக்கே வேலை வாய்ப்புகளை கொடுக்க வேண்டி வரும். அப்படியெல்லாம் எந்த முதலாளியும் செய்ய மாட்டான். ஆனால் இப்படி ஒரு விவாதம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது என்று கூறுகின்றனர்.
சர்வதேச அரசியல் விமர்சகர்கள் சொல்வது உண்மைதான். இந்தியாவை பழிவாங்க வேண்டும் என்று, சேவை துறையின் மீது வரி போடப்படும்போது, இந்தியாவிலிருந்து உழைப்பாளர்களை ஏற்றுமதி செய்யும் இன்போசிஸ், டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசென்ட் மற்றும் எச்.சி.எல் போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்படும். மறுபுறம் இவர்களை விட்டால் குறைந்த கூலிக்கு அதிக ஆட்களும் அமெரிக்காவுக்கு கிடைக்க மாட்டார்கள். சொந்த நாட்டு மக்களை பயன்படுத்தினால் ஏகப்பட்ட தொழிலாளர் உரிமைகளை கொடுக்க வேண்டும். தவறினால் போராட்டம், ஸ்ட்ரைக் என கொடி பிடிப்பார்கள்.
ஆக இதெல்லாம் அமெரிக்காவின் அச்சுறுத்தும் டெக்னிக்தான் என்று ஐடி துறையில் இருப்பவர்களும் கூறுகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம், டிரம்ப் என்ன ஆட்டம் ஆடுகிறார் என.












Click it and Unblock the Notifications