ஆர்எஸ்எஸ் தீவிரவாத இயக்கமாம்.. தடை விதிக்க கனடாவில் எழுந்த குபீர் கோரிக்கை
வாஷிங்டன்: கனடிய சீக்கிய தலைவரும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜக்மீத் சிங், இந்திய தூதர்களுக்குத் தடைகள் விதிக்க வேண்டும் என்றும், "தீவிரவாத அமைப்பான" ரஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தை (RSS) கனடாவில் தடை செய்ய வேண்டும் என்றும் அதிரடியான கோரிக்கை விடுத்துள்ளார்.
சீக்கிய பிரிவினைவாதியின் கொலைக்கு இந்திய தூதர்கள் சிலர் காரணம் என்று ராயல் கனடிய மவுண்டட் போலீஸ் (RCMP) குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது. கனடியர்களைப் பாதுகாப்பதற்கும் நாட்டில் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகச் சிங் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு அமைப்புகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஒரு விரிவான திட்டம் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியா மீதான இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகளுக்குப் விடை காணும் விதமாக, பொது பாதுகாப்பு குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று ஜக்மீத் சிங் கோரிக்கை விடுத்தார். ஜக்மீத் சிங்கின் கோரிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்ட இந்திய தூதர்களுக்குத் தடைகள் விதிப்பது மட்டுமல்லாமல், "கனடாவிலும் அதற்கும் அப்பால் செயல்படும் வன்முறை, ராணுவ, பயங்கரவாத அமைப்பு" என்று அவர் குறிப்பிட்ட RSS ஐ முழுமையாகத் தடை செய்வதும் அடங்கும்.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கனடா அரசுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்திய அரசாங்கத்தை பொறுப்பு ஏற்க வைப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
கனடாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் இந்தியாவுக்கும், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு கனடா மற்றும் இந்தியா இடையேயான உறவில் பனிப்போரை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கனடாவில் உள்ள இந்திய தூதர்களை இந்தியா வெளியேற்றியதற்கு பதிலாக, இந்தியாவில் உள்ள கனடா தூதர்களை கனடா பிரதமர் ட்ரூடோ வெளியேற உத்தரவிட்டுள்ளார்.ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி போராடும் காலிஸ்தான் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர். இந்தியாவில் பல நாசவேலைகளில் இவர் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர், கனடா குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
