'பிரதமர் மோடி.. உங்களைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி".. நெகிழ்ந்து போன அமெரிக்க அதிபர் பிடன்
வாஷிங்டன்" அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ஒரு பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் பேசினார். ஆன்லைன் நடந்த அந்த பொதுநிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோருடனும் பேசினார்.
சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார சக்தியை சமநிலைப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ."குவாட்" நாடுகளின் தலைவர்கள், ஒரு பிராந்திய கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.
இந்நிலையில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள், தங்களின் நான்கு நாடுகளுக்கு இடையேயே "சுதந்திரமான, திறந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பகுதி வளர்ச்சி பற்றியும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பற்றியும் இன்று கூடி விவாதித்தனர்.

உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி
அப்போது பிரதமர் மோடி பிடனை வரவேற்று பேசினார். அதற்கு நன்றி தெரிவித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பேசுகையில் "பிரதமர் மோடி ... உங்களைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று வரவேற்றார்,

தடுப்பூசி
அப்போது மோடி பேசுகையில், "நண்பர்களிடையே இருப்பது நல்லது. இந்த முயற்சிக்காக அதிபர் பிடனுக்கு நான் நன்றி கூறுகிறேன். எங்கள் ஜனநாயக விழுமியங்களாலும், சுதந்திரமான, திறந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் மீதான எங்கள் உறுதிப்பாட்டினாலும் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இன்று எங்கள் நிகழ்ச்சி நிரல் என்பது உலகளாவிய நன்மைக்கான சக்தியாக அமைந்துள்ள குவாட் நாடுகளின் கொரோனா தடுப்பூசிகள், காலநிலை மாற்றம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பற்றியது என்றார்.

முக்கியமான தூண்
மேலும் மோடி பேசுகையில், "இந்த நேர்மறையான விவாதம், உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதும் இந்தியாவின் பண்டைய தத்துவத்தின் விரிவாக்கமாக நான் காண்கிறேன். எங்களுடைய பகிரப்பட்ட வளங்களை முன்னேற்றுவதற்கும் பாதுகாப்பான, நிலையான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் ஊக்குவிப்பதற்கும் முன்பை விட நெருக்கமாக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம், இன்றைய உச்சி மாநாடு குவாட் வயதுக்கு வந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. இது இப்போது பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையின் முக்கியமான தூணாக இருக்கும்" என்று மோடி கூறினார்.

ஜோ பிடன் பேச்சு
அப்போது வெள்ளை மாளிகையில் இருந்தபடி அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பேசுகையில் , "நான்கு நாடுகளின் எதிர்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ பசிபிக் அவசியம். அமெரிக்கா, உங்களுடனும், எங்கள் கூட்டாளர்களுடனும், பிராந்தியத்தில் உள்ள எங்கள் அனைத்து நட்பு நாடுகளுடனும், ஸ்திரத்தன்மையை அடைய உறுதியுடன் உள்ளது" என்றார்.

தடுப்பூசி உற்பத்தி
குவாட் நாடுகளின் மெய்நிகர் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அரசு முக்கியத்துவம் அளித்து செயல்படும். குவாட் அமைபப்பு கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளில் கவனம் செலுத்தும் என்று கூறியுள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கான உற்பத்தி திறன் அதிகரிப்பதை ஆதரிப்பதற்காக குவாட் நாடுகள் நிதி ஒப்பந்தங்களை அறிவிக்கும் என்று பிடன் தலைமையிலான அமெரிக்கஅரசு தெரிவித்துள்ளது, இதன் மூலம் சீனாவின் பரவலான தடுப்பூசி இராஜதந்திரத்தை எதிர்கொள்ள இந்தியா மற்ற நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications