ஆசை ஆசையாய் கனடா பயணம்.. 2வது நாளிலேயே பணிநீக்கம் செய்த மெட்டா.. அதிர்ச்சியில் ஹைதராபாத் இளைஞர்!
வாஷிங்டன்: மெட்டா நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 13 சதவீதம் பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், மெட்டா நிறுவனத்தில் வேலை கிடைத்த இரண்டாவது நாளே ஹைதராபத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் வேலையை இழந்துள்ளார். ஆசை ஆசையாய் சென்ற அவருக்கு கடைசியில் பெருத்த சோகம் ஏற்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய எலான் மஸ்க் 50 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தார்.
தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை இந்த செய்தி கொடுத்த நிலையில், மற்றொரு சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக்கின் மெட்டாவும் ஊழியர்கள் பலரை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.

பேறுகால விடுப்பில் இருந்த பெண் நீக்கம்
அதன்படி 11 ஆயிரம் ஊழியர்கள் லே ஆஃப் செய்யப்படுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்தது அந்த நிறுவனத்தில் பணியாற்றிய பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மெட்டா நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 13 சதவீதம் பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால், வேலையிழந்த பலரும் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று கூட பேறுகால விடுப்பில் இருந்த அன்னேகா படேல் என்ற பெண் ஒருவர் தான் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாக அதிர்ச்சி தெரிவித்து இருந்தார்.

வேலை கிடைத்த இரண்டாவது நாளே
மார்க் சூகர்பெர்க்கின் இந்த நடவடிக்கையை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், மெட்டா நிறுவனத்தில் வேலை கிடைத்த இரண்டாவது நாளே ஐதராபத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் வேலையை இழந்துள்ளார். ஐஐடி கராக்பூரில் படித்த ஹிமான்சு என்பவர், மெட்டா நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் மூட்டை முடிச்சுகளுடன் கனாடாவில் போய் இறங்கியுள்ளார். கனடா சென்ற இரண்டாவது நாளே அவருக்கு வேலை போய் பறிவிட்டதாக மெட்டா அறிவித்துள்ளது.

பணியில் சேர்ந்த 2 நாளில்..
இதனால், சோகம் அடைந்த ஹிமான்சு கவலையுடன் லிங்ட் இன் பக்கத்தில் இது குறித்த தகவலை பதிவிட்டுள்ளார். இதில் ஹிமான்சு கூறியிருப்பதாவது:- மெட்டா நிறுவனத்தில் பணிக்கு சேரும் முன்பு கிட் ஹப், அடோப் மற்றும் பிலிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றினேன். மெட்டா நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததால் கனடாவிற்கு சென்றேன். பணியில் சேர்ந்த 2 நாளில் எனது இந்த பயணம் நிறைவடைந்துவிட்டது.

என்ன செய்வதென்று தெரியவில்லை
மெட்டா நிறுவனம் மேற்கொண்ட மிகப்பெரிய லே ஆஃப்பில் நான் பாதிக்கப்பட்டேன். அடுத்து என்ன என்று தெரியவில்லை. உண்மையில் என்ன செய்வதென்று தெரியவில்லை.. அடுத்து என்ன வருகிறதோ அதை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன். கனடாவிலோ இந்தியாவிலோ.. ஏதேனும் சாப்ட்வேர் இன்ஜினியர் பணி இருந்தால் தெரியப்படுத்துங்கள்'' என்று பதிவிட்டுள்ளார். ஹிமான்சுவின் இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கேட்கவே வருத்தமாக உள்ளது
நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆதரவாகவும், நீங்களே சொந்தமாக ஒரு கம்பெனியை தொடங்கி விடுங்கள் என்றும் ஊக்கப்படுத்தும் வகையில் பதிவிட்டு வருகின்றனர். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "இது கொடூரமானது. இந்த செய்தியை கேட்கவே வருத்தமாக உள்ளது. இந்த நிலையில்லாத, நிச்சயம் அற்ற சிக்கலான உலகில் ஒவ்வொருவரும் சிறிதளவாவது மனிதாபிமானத்தை வெளிப்படுத்த வேண்டும். நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். விரைவில் புதிய பணியிடத்தில் நீங்கள் சேர்ந்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications