இந்தியர்களே உஷார்! H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு.. முக்கிய அறிவிப்பு கொடுத்த அமெரிக்க நிறுவனங்கள்!
வாஷிங்டன்: H-1B விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியர்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கின்றன.
H-1B விசா என்பது அமெரிக்காவின் தற்காலிக குடியுரிமை போன்றதாகும். வெளிநாடுகளில் உள்ள திறமையான பணியாளர்களை அமெரிக்காவுக்கு வரவழைத்து வேலை வாங்க இந்த விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 1990 முதல் இந்த விசா முறை நடைமுறையில் இருக்கிறது. மூன்று ஆண்டுகள் வரை இந்த விசாவின் மூலம் அமெரிக்காவில் வசிக்க முடியும். அதிகபட்சமாக விசாவை நீட்டித்து ஆறு ஆண்டுகள் வரை இந்த விசாவை வைத்துக் கொண்டு அமெரிக்காவில் இருக்க முடியும். இதற்கிடையில் அமெரிக்க குடியுரிமை வாங்கிவிட்டால், நிரந்தரமாக அமெரிக்காவில் தங்கிக் கொள்ளலாம்.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் மொத்தம் 5 லட்சம் பேர் H-1B விசாவின் மூலம் வசிக்கிறார்கள். இவர்களில் 71% அதாவது, தோராயமாக 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் ஆவார். H-1B விசாவை வைத்திருக்கும் அனைவருக்கும் விசாவுக்கான கட்டணத்தை அவர்கள் பணி செய்யும் நிறுவனங்களே வழங்கும்.
முன்னர் இதற்கான கட்டணம் ரூ.8.8 லட்சமாக இருந்தது. இன்று இந்த கட்டணம் ரூபாய் 88 லட்சமாக அதிகரித்திருக்கிறது. செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் இந்த புதிய விசா கட்டண நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது. எனவே அமெரிக்க நிறுவனங்கள் H-1B விசா வைத்திருக்கும் ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த விசாவை வைத்திருப்பவர்களில் இந்தியர்கள் அதிகம் என்பதால் இந்த அறிவிப்பு இந்தியர்களுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அதாவது இன்று நள்ளிரவு 12 மணிக்குள் H-1B விசா வைத்திருக்கும் அனைத்து ஊழியர்களும் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்ப வேண்டும் என்று மைக்ரோசாப்ட், ஜே பி மோர்கன் உள்ளிட்ட டெக் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. ஏனெனில் இந்த விசா காலாவதி ஆகிவிட்டது என்றாலும் அல்லது புதியதாக விசா பெறுவதாக இருந்தாலும் ரூபாய் 88 லட்சத்தை கட்டணமாக கொடுத்து பெற வேண்டும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது ஊழியர்களை உடனடியாக அமெரிக்காவுக்குள் நிறுவனம் திருப்பி அழைத்து இருக்கிறது.
அமெரிக்க மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் நோக்கிலும், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பணியாளர்கள் அமெரிக்காவுக்குள் குடியேறுவதை தவிர்க்கும் நோக்கத்திலும் இந்த கட்டண உயர்வை அமெரிக்கா அரசு அறிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. வெளிப்படையாக பார்த்தால் இது சரியானதாக இருக்கும் என்றாலும் இந்த கட்டண உயர்வு இந்தியர்களை கடுமையான பாதிக்கும் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications